கல்வியுடன் நல்ல பண்பையும் கற்க வேண்டும் மாநகராட்சி கமிஷனர் யோசனை
பேரையூர்: டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமம் 84 வது ஆண்டு விழா நடந்தது.இதில் மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் விருது, பரிசுகள் வழங்கி பேசுகையில், மாணவர்கள் இளம் பருவத்தில் கல்வியோடு நல்ல பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுக்கு பிடித்த பாடத்தை நன்கு படித்து அதில் முன்னேற வேண்டும். கடுமையான உழைப்பு மாணவர்களை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன் பேசுகையில், விடுதலை இயக்கத்தின் விழுமியங்களை இளம் தலைமுறையினருக்கு ஆசிரியர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். நல்லிணக்கம், வன்முறையற்ற சமூகம், வேற்றுமையில் ஒற்றுமை, சுற்றுச்சூழல் மேம்பாடு செய்திகளை சொல்வதில் பள்ளிகள் ஆர்வம்காட்ட வேண்டும். மாணவர்கள் முதலில் தங்களது குருவை தேர்வு செய்து, தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றார்.இந்த ஆசிரமத்தில் ஜே.சி குமரப்பா வசித்த இல்லத்தை புனரமைத்து அரங்கமாக மாற்றும் திட்டமுள்ளது. குமரப்பாவின் எழுத்துக்களை புதுப்பிக்கும் முயற்சிக்கு அமெரிக்காவின் ஜான்ஹாப்கின்ஸ் பல்கலை ஆதரவு தர முன்வந்துள்ளது என ஆசிரம தலைவர் ரகுபதி பேசினார்.