சென்னை ஐ.ஐ.டி., யில் கணிதத்துடன் இணைந்த கணினி பாடம் அறிமுகம்
சென்னை: சென்னை ஐ.ஐ.டி., யில் கணிதத்துடன் இணைந்த கணினி பாடமாக பி.எஸ்சி.,-பி.எட்., என்ற புதிய பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்திய கல்வி நிறுவனங்களின் தரவரிசையில், சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் பிடித்தது குறித்து, அதன் இயக்குனர் காமகோடி, நேற்று அளித்த பேட்டி:ஒட்டு மொத்த தரவரிசையில், 6வது ஆண்டாகவும், இன்ஜினியரிங் தரவரிசையில் தொடர்ந்து, 9வது ஆண்டாகவும் சென்னை ஐ.ஐ.டி., முதலிடத்தில் உள்ளது. இது, இந்த கல்வி நிலையத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக உழைத்ததால் கிடைத்தது.உலகில், 15 முதல் 35 வயதுடைய இளைஞர்கள் அதிகம் உள்ள இந்த நாட்டில், 75 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நாம் நிறைய செய்ய வேண்டும். அப்படி திறமையானவர்களுக்கான கல்வி செலவை, சென்னை ஐ.ஐ.டி., ஏற்கிறது.இங்கு, தேசிய விளையாட்டு வீரர்கள் ஐந்து பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இதுபோல மற்ற நிறுவனங்களும் வழங்கினால், விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அந்த நம்பிக்கையால் தான் ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கும்.மருத்துவ அறிவியல், செயற்கை நுண்ணறிவு தரவு பகுப்பாய்வு என்ற, ஏ.ஐ., டேட்டா அனாலிசிஸ் உள்ளிட்ட புதிய படிப்புகளையும், புதிய புதிய பாடத்திட்டங்களையும் அறிமுகம் செய்கிறோம். 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தின் வாயிலாக ராக்கெட், கிரையோஜனிக் இன்ஜின்கள் தயாரிப்பு, மைக்ரோ பிராசசிங் சிப் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளிலும் சாதனை படைத்துள்ளோம்.உலக கண்டுபிடிப்புகளுக்கு போட்டியிடும் வகையிலான தொழில்நுட்பமும், பொருளாதார மதிப்பும் உள்ளவற்றை கண்டுபிடிப்பதற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும், கட்டாயம் பட்டதாரியாக இருக்க வேண்டும். அதற்கு வழிவகை செய்யவும், சென்னை ஐ.ஐ.டி., முயற்சிக்கிறது.கணிதமும், கணினி அறிவும் தான், இன்ஜினியரிங், தொழில்நுட்ப படிப்புகளின் அடிப்படை. அவற்றை பற்றிய புரிதல் பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். அதனால், மேம்படுத்தப்பட்ட கணிதத்துடன் இணைந்த கணினி பாடத்துடன் கூடிய பட்டப்படிப்பையும், ஆசிரியர் பயிற்சியையும் ஒருங்கிணைத்து, புதிதாக பி.எஸ்சி., - பி.எட்., என்ற புதிய பட்டப்படிப்பை வழங்க உள்ளோம் என்றார்.