அனுமதி பெறாமல் உயர்கல்வி முடித்த பள்ளி ஆசிரியர்கள் விபரம் சேகரிப்பு
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறை அனுமதி பெறாமல், உயர்கல்வி முடித்த ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.தமிழக தொடக்கப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, மாநில அளவில் இல்லாமல் ஒன்றிய அளவில் பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிட்டோ ஜாக் என்ற ஆசிரியர் கூட்டமைப்பினர், செப்., 30, அக்., 1ல் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் மற்றும் அதிகாரிகள், கடந்த 23ம் தேதி, அவர்களுடன் பேச்சு நடத்தினர். அப்போது, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிவோரில், துறை அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விபரங்களை தொகுத்து அனுப்பும்படி, தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் வாயிலாக, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து, சம்பந்தப்பட்டவரின் கையொப்பம் பெற்று, நேரில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, பள்ளிக் கல்வித்துறையின் அனுமதியுடன் உயர்கல்வி படித்தோரின் விபரங்கள், துறையிடம் ஏற்கனவே உள்ளன.அனுமதி பெறாமல் படித்தோரின் விபரங்கள் இல்லாததால், பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், போராட்டங்கள் அதிகரிக்கின்றன. அவற்றை களையும் வகையில், ஆசிரியர்களின் முழு தகவல்களையும் திரட்டும் பணியில், பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.