பல் மருத்துவ சங்க மாநில மாநாட்டில் கவுரவம்
குன்னுார் : குன்னுார் புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளியில், தமிழ்நாடு பல் மருத்துவர்களின் சார்பில், சிகரம்-24 என்ற தலைப்பில், 37வது மாநில மாநாடு நடந்தது.மாநாட்டை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, மாவட்ட எஸ்.பி., நிஷா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.அதில், சங்க மாநில தலைவர் டாக்டர் சுரேந்திரன் பேசுகையில், '' எங்கள் சங்கத்தின் சார்பில், மாநிலம் முழுவதும் இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்தப்படும். ஐந்து ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி சேவைகள் செய்ய மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தின் முதல் பல் டாக்டரான, 98 வயதான சோப்ரா கவுரவிக்கப்பட்டார். அப்போது சோப்ரா பேசுகையில், எனக்கு கவுரவம் அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. எங்களை (டென்டிஸ்ட்களை) பற்றி ஒரு நகைச்சுவை தகவலை சொல்ல விரும்புகிறேன். என்னை போல மிகவும் கண்டிப்பான டென்டிஸ்ட் ஒருவர் இறந்து விட்டார். அவருடைய கல்லறையில், இதுதான் கடைசியாக அடைக்கப்பட்ட கேவிட்டி (குழி), என எழுதி இருந்தது, என்றார். அனைவரும் சிரித்தனர்.மாநில செயலாளர் செந்தாமரை, மாநாட்டு செயலாளர் மகேஷ்வர், ஒருங்கிணைப்பு தலைவர் கவுதமன், நீலகிரி மாவட்ட பல் மருத்துவர்கள் சங்கம் தலைவர் இனியன், செயலாளர் பிரவீன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநில பல் மருத்துவர்கள் 850 பேர், பல் மருத்துவ மாணவர்கள், 300 பேர் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை டாக்டர் கவுதமன் தலைமையில் நீலகிரி மாவட்ட மருத்துவ சங்க நிர்வாகிகள் செய்தனர்.