புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் இளைஞர்களே இந்தியாவின் பலம்; பிரதமர் மோடி
புதுடில்லி: புதுமையை புகுத்தும் இளைஞர்களே நாட்டின் பலமாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.7வது எஸ்.ஐ.எச்., எனப்படும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் நாடு முழுவதும் 51 நிறுவனங்களில் இருந்து ஏராளமான இளைய தலைமுறையினர் கலந்து கொண்டனர். சாப்ட்வேர் பிரிவில் தொடர்ச்சியாக 36 மணிநேரப் போட்டியும், ஹார்டுவேர் பிரிவில் இன்று முதல் 15ம் தேதி வரையிலும் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்ற சுமார் 1,500 இளைஞர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது, அவர் பேசியதாவது: இந்தியாவின் பலமே புதுமையை புகுத்தும் இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தி தான். அறிவியல் தொழில்நுட்ப சிந்தனையுடன் தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இளைஞர்களின் பாதைகளில் இருக்கும் தடைகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு அகற்றி வருகிறது.புதுமை மற்றும் அதற்கான அறிவால் தான் இனி உலகின் எதிர்காலம் இருக்கிறது. குறிப்பாக, நாட்டின் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான பொறுப்புகளை இந்திய இளைஞர்கள் வளர்த்துக் கொள்கின்றனர்.இவ்வாறு கூறினார்.