அரிசந்திராபுரம் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த பெற்றோர் கோரிக்கை
திருவாலங்காடு: திருவாலாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரத்தில், 20 ஆண்டுகளாக நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 335 மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரிசந்திராபுரம் முஸ்லிம் பகுதியை சேர்ந்தவர்கள்.இவர்களில் பெரும்பாலானோர் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு பயில அரக்கோணம் அல்லது திருவள்ளுர் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இந்த மாணவ- மாணவியர் படிப்பை தவிர்த்து வருகின்றனர்.குறிப்பாக பெண் குழந்தைகளை வெளி ஊர்களுக்கு சென்று பயில பெற்றோர் அனுமதிப்பதில்லை. இதனால் மாணவியரின் கல்வி பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே அரிசந்திராபுரம் கிராமத்தில் உயர்நிலை பள்ளி அமைய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியர்களின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், உயர்நிலை பள்ளி அமைப்பதற்கான சாத்தியக்கூறு இருந்தால் மாநில கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.