உள்ளூர் செய்திகள்

எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்; மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்!

சென்னை: மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்திற்கு நிதி கிடையாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்மேந்திர பிரதான் நிருபர்கள் சந்திப்பில், புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்பது விதி. அனைத்து மாநிலங்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏன் தமிழக அரசு மட்டும் ஏற்க மறுக்கிறது? நிபந்தனைகளை ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் வர வேண்டும் என கூறியிருந்தார்.இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: They have to come to the terms of the Indian Constitution என்கிறார் மத்திய கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை rule of law என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்தியா! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி!அதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது என்று பிளாக்மெயில் செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். எங்கள் உரிமையைத் தான் கேட்கிறோம். உங்கள் தனிச் சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக் குணத்தையும் டில்லி பார்க்க வேண்டியிருக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்