உள்ளூர் செய்திகள்

சுழற்சி முறையில் துறை தலைவர் பணியிடங்கள்: பாரதியார் பல்கலை நடவடிக்கை

கோவை: நான்கு ஆண்டுகளுக்கு பின், 17 துறைகளில் சுழற்சி முறையில் துறை தலைவரை நியமித்து, பாரதியார் பல்கலை உத்தரவிட்டுள்ளது.பாரதியார் பல்கலையில், 39 துறைகளின் கீழ், 54 முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. 133 கல்லுாரிகள் அதன் கட்டுப்பாட்டில் உள்ளன.பல்கலையில், பல்வேறு துறைகளிலும் துறைத் தலைவர் பணியிடங்களில் பல ஆண்டுகளாக ஒரே பேராசிரியர் இருந்து வருவதாகவும், அப்பணியிடத்தை சுழற்சி முறையில் நிரப்ப வேண்டும் எனவும், பல்கலை பேராசிரியர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.பாரதியார் பல்கலை ஆசிரியர்கள் சங்கமும் இக்கோரிக்கையை நிறைவேற்ற கடந்த நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. கடந்த மாதம், சுழற்சி முறையில் துறைத் தலைவர் பணியிடங்களை நிரப்ப பல்கலை நிர்வாகம் நடவடிக்கைகளை துவங்கியது.இந்நிலையில், 17 துறைகளின் பணிமூப்பு அடிப்படையில், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் புதிய துறைத்தலைவர்களாக நியமித்து பல்கலை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.தொடர்ந்து அனைத்து துறைகளிலும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, துறை தலைவர் பணியிடம் சுழற்சி முறையில் மாற்றப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.பல்கலை பேராசிரியர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.பேராசிரியர்கள் சிலர் கூறுகையில்,'பல்கலையின் இம்முடிவு வரவேற்கக்கூடியது. இதன் மூலம் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். அனைவரும் துறைத்தலைவர்களாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பேராசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்