ஐ.ஐ.டி., பாலக்காட்டில் புதிய பாடப்பிரிவு: இயக்குனர் சேஷாத்திரி சேகர் தகவல்
பாலக்காடு: கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பாலக்காடு ஐ.ஐ.டி.,யில், புதிய பாடப்பிரிவு, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பாலக்காடு ஐ.ஐ.டி., இயக்குனர் சேஷாத்திரி சேகர் கூறியதாவது:அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் வளர்ந்து வரும் உலகளாவிய வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, பொருட்கள் மற்றும் உலோகவியல் பொறியியல் என்ற புதிய துறையை பாலக்காடு ஐ.ஐ.டி., துவங்கியுள்ளது. குறிப்பாக, எரிசக்தி, விண்வெளி ஆய்வு, பாதுகாப்பு மற்றும் மருத்துவ துறைகளில் மேம்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ப திட்டமிடப்பட்டுள்ளது.இந்த துறையின் கீழ், வரும் 2026 - 27ம் கல்வியாண்டு முதல் பி.டெக்., பாடப்பிரிவு துவங்கப்படுகிறது. முதற்கட்டமாக, 30 மாணவர்களுக்கு இந்த பிரிவில் பயில வாய்ப்பு வழங்கப்படும். இது கல்வி மற்றும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளில் ஒரு முக்கிய மையமாக திகழும்.ஆராய்ச்சி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் உதவும் வகையில், புனேவில் உள்ள 'சி-டாக்' நிறுவனத்துடன் இணைந்து 'மாதவா சூப்பர் கம்ப்யூட்டிங் வசதி' வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, புதிய மருந்து கண்டுபிடிப்புகள், காலநிலை மாற்ற ஆய்வுகள், சிக்கலான தரவு பகுப்பாய்வு, பொருள் வடிவமைப்பு போன்ற உயர்நிலை ஆராய்ச்சிகளை மிக எளிதாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ள முடியும். இது, ஐ.ஐ.டி.,யின் பல்துறை சார்ந்த ஆராய்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக, மூலக்கூறுகளின் கட்டமைப்பை துல்லியமாக ஆய்வு செய்ய உதவும், 500 மெகா ஹெர்ட்ஸ் என்.எம்.ஆர்., ஸ்பெக்ட்ரோமீட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வக வசதி வேதியியல் மற்றும் உயிரியல் பொறியியல் துறை மாணவர்களுக்கு மட்டுமின்றி, தொழில்முறை சார்ந்த நிறுவனங்களின் ஆராய்ச்சித் தேவைகளுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த புதிய முன்னெடுப்புகள் வாயிலாக, கேரளா மற்றும் தேசிய அளவில் தொழில்நுட்பக்கல்வியில் ஐ.ஐ.டி., பாலக்காடு முன்னோடி நிலையில் உள்ளது.இவ்வாறு, கூறினர்.