பள்ளிகளுக்கு மேல் செல்லும் மின் கம்பியை இடம் மாற்ற உத்தரவு
சென்னை: பள்ளி கட்டடங்களுக்கு மேல், ஆபத்தான முறையில் செல்லும் மின் கம்பிகளை, விடுமுறைக்குள் இடம் மாற்ற, தலைமை ஆசிரியர்களுக்கு, தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, தொடக்க கல்வித் துறை இயக்குநர் நரேஷ் பிறப்பித்துள்ள உத்தரவு: கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்குள், பள்ளி கட்டடங்களுக்கு மேல் செல்லும், உயர் அழுத்த மின் கம்பிகளின் வழித்தடத்தை மாற்ற, மின்வாரியத்தின் உதவியுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிக்கு அருகில் உள்ள, ஆபத்தான மரக்கிளைகளை வெட்டுவதுடன், பட்டுப்போன மரங்கள், பாழடைந்த கட்டடங்களையும் அகற்ற வேண்டும் அல்லது மாணவர்கள் அருகில் செல்லாதவாறு தடுப்பு ஏற்படுத்த வேண்டும்.பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகளை துாய்மைப்படுத்தும் பணிகளை, விடுமுறைக்குள் முடிக்க வேண்டும். செப்டிக் டேங்குகள், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அருகில் இருந்தால், அவற்றை மூட வேண்டும்.'ஸ்மார்ட் போர்டு'கள், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை, இணைய வசதியுடன், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளி வயது குழந்தைகளை கண்டறிந்து, பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை, மகிழ்ச்சியுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.