சட்ட மாணவர்களுக்கு அனுபவ கல்வி: அலையன்ஸ் பல்கலை புது திட்டம்
பெங்களூரு: சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு நடைமுறை சார்ந்த சட்ட அறிவை புகட்டும் வகையில் பெங்களூருவில் உள்ள, 'அலையன்ஸ்' பல்கலை நடுவர் மற்றும் சமரச தீர்வு மையத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம், மாற்று தகராறு தீர்வு முறைகளில் வகுப்பறை அறிவை கடந்து, நேரடி அனுபவத்தை பெற்றுதர திட்டமிட்டுள்ளது.கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடுவர் மற்றும் சமரச தீர்வு மையம் (உள்நாடு மற்றும் வெளிநாடு) இயங்கி வருகிறது. இந்த மையத்துடன் இணைந்து, சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான, 'இன்டர்ன்ஷிப்' எனப்படும், களப்பயிற்சியை தொடங்க அலையன்ஸ் பல்கலை திட்டமிட்டுள்ளது.மாற்று தகராறு தீர்வு முறைகளான மத்தியஸ்தம், நடுவர் மற்றும் சமரச தீர்வு துறைகளில் கல்வி ஒத்துழைப்பு, ஆராய்ச்சி மற்றும் மாணவர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் நோக்கில், இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதற்காக பெங்களூரு, நடுவர் மற்றும் சமரச தீர்வு மையம் சார்பில், அதன் இயக்குநரும், மாவட்ட நீதிபதியுமான தினேஷ் ஹெக்டே, அலையன்ஸ் பல்கலை சார்பில் உயர்நீதிமன்ற பதிவாளர் டாக்டர் மாதம் விஸ்வநாதையா இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த கூட்டுத் திட்டம், சட்டம் பயிலும் மாணவர்களுக்கு, நடுவர் மன்ற நடைமுறைகள் மற்றும் மாற்று தகராறு தீர்வு முறைகளில் நேரடி அனுபவம் வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படும்.வகுப்பறையில் கல்வி பயில்வதற்கும், நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைக்கும் அளவுக்கு, மாணவர்களுக்கு அனுபவம் சார்ந்த நடைமுறை கல்வி அறிவு புகட்டும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அலையன்ஸ் பல்கலையின் பொது பதிவாளர் சுரேகா ஷெட்டி, நடுவர் மற்றும் சமரச தீர்வு மையத்தின் துணை இயக்குநர் விக்னேஷ் குமார், அலையன்ஸ் சட்டப் பள்ளியின் டீன், டாக்டர் ஷ்யாம் கிஷோர் மற்றும் பேராசிரியர்கள், துறை தலைவர்கள், வேலைவாய்ப்பு பிரிவு இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.