உள்ளூர் செய்திகள்

நிலவில் இன்று மாலை தரையிறங்குகிறது சந்திரயான் - 3

நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008ல் சந்திரயான் விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் செலுத்தியது. இது நிலவை சுற்றி வந்து வெற்றிகரமாக செயல்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 2 விண்கலம், 2019ல் அனுப்பப்பட்டது.ரூ.650 கோடி செலவுஇந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டாலும், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க வேண்டிய, லேண்டர் சாதனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நிலவில் மோதியது. இந்த அனுபவத்தின் அடிப்படையில், நிலவில் மெதுவாக தரையிறங்கும் வகையில், ஒவ்வொரு நொடிக்கும் திட்டமிட்டு, 650 கோடி ரூபாய் செலவில், சந்திரயான் - 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள, புரபல்ஷன் மாட்யூல் எனப்படும் உந்து கலத்தில் இருந்து, நிலவில் தரையிறங்க உள்ள, லேண்டர் சாதனம் கடந்த 17ம் தேதி பிரிந்து சென்றது. இது, நிலவில் இன்று மாலை 6:04 மணிக்கு தரை இறங்க உள்ளது. இதன் நேரலை ஒளிபரப்பு மாலை 5:20 மணி முதல் துவங்குகிறது. விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டர், நிலவில் தரை இறங்கியவுடன் அதன் உள்ளே இருந்து, பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ள, ரோவர் வாகனம் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும்.லேண்டர் சாதனம் மற்றும் ரோவர் வாகனம், நிலவில் மேற்பரப்பில், ஒரு நிலவு நாள், அதாவது, நம் பூமியின், 14 நாட்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்காக, இரண்டிலும் பிரத்யேக ஆய்வு சாதனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவை நிலவின் மேற்பரப்பிலும், நிலவின் மேற்பரப்பில் இருந்து உள்ளே சென்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும். இதுவரை, அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியன் ஆகியவை மட்டுமே, நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளை செய்துள்ளன.பெருமைவிக்ரம் லேண்டர் சாதனம் வெற்றிகரமாக தரையிறங்கினால், இந்தப் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா இடம்பெறும். மேலும், நிலவில் இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படாத, அதன் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையும் நம் நாட்டுக்கு கிடைக்க உள்ளது. ரஷ்யா சமீபத்தில் அனுப்பிய, லுானா - 25 விண்கலத்தில் இருந்த லேண்டர் சாதனம், கட்டுப்பாட்டை இழந்து, நிலவில் மோதியது. இதனால், ரஷ்யாவின் நிலவை ஆய்வு செய்யும் திட்டம் தோல்வியடைந்தது. இந்நிலையில், சந்திரயான் - 3 திட்டத்தின் செயல்பாடுகளை உலக நாடுகள் உன்னிப்புடன் கவனிக்கின்றன.திகிலான 17 நிமிடங்கள்!பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள் என்று கருதப்படும் நிலவில், சந்திரயான் - 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.நிலவில் லேண்டர் சாதனம் தரைஇறங்க உள்ள, 17 நிமிடங்கள் மிகவும் முக்கியமானது. இதை, திகிலான 17 நிமிடங்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இது குறித்து, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் முன்பு கூறியுள்ளதாவது:ராக்கெட் செலுத்தப்பட்டது, புவி வட்டப் பாதையில் பயணித்தது, அங்கிருந்து நிலவு வட்டப் பாதைக்கு செலுத்தப்பட்டது, நிலவு வட்டப் பாதையில் வலம் வந்தது போன்றவை மிக மிக முக்கியமான தருணங்களாகும். இந்த அனைத்து சவால்களையும் சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக சந்தித்துள்ளது.ரோவர் வாகனத்தை சுமந்து செல்லும் லேண்டர் சாதனம், நிலவின் மேற்பரப்பில் இறங்குவதுதான், மிகவும் சிக்கலான மற்றும் முக்கியமான அம்சமாகும்.சரியான நேரத்தில், சரியான உயரத்தில் இருந்து லேண்டர் சாதனம் நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க வேண்டும். இதில் மற்றொரு முக்கியமான விஷயம், சரியான வேகத்தில் செல்வது. சந்திரயான் - 2 திட்டத்தில், வேகத்தை குறைக்க முடியாததே பிரச்னையாக முடிந்தது.லேண்டர் சாதனத்தில், நான்கு இன்ஜின்கள் உள்ளன. இதை சரியான எரிபொருளைப் பயன்படுத்தி, வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.நிலவில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் இருந்து லேண்டர் தரையிறங்கும். அப்போது சரியான முறையில், வேகத்தை கட்டுப்படுத்தும், பிரேக் பயன்படுத்த வேண்டும். நிலவில் இருந்து, 6.8 கி.மீ., தொலைவில் இருக்கும்போது, இதில் இரண்டு இன்ஜின்கள் நிறுத்தப்படும். மற்ற இரண்டு இன்ஜினிகள் உதவியுடன், வேகம் கட்டுப்படுத்தப்படும்.நிலவில் இருந்து 100 - 150 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது, நிலவின் மேற்பரப்பு, ஸ்கேன் செய்யப்படும். அங்கு பள்ளங்கள் உள்ளதா, மேடாக உள்ளதாக, தரையிறங்க வசதி உள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும். அதைத் தொடர்ந்தே, லேண்டர் தரையிறக்கப்படும்.இந்த காரணிகள் எல்லாம் முன்னதாகவே ஆய்வு செய்யப்பட்டு, தரைஇறங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன், லேண்டர் சாதனத்துக்கு தரையிறங்குவதற்கான தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.மேலும், நிலவின் மேற்பரப்பில் உள்ள ஈர்ப்பு விசை உள்ளிட்டவையும் பார்க்கப்படும். துவக்கத்தில், வினாடிக்கு, 1.68 கி.மீ., வேகத்தில் தரையிறக்கப்படும். அப்போது, லேண்டர் சாதனமானது, நிலவின் மட்டத்துக்கு இணையாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில், 90 டிகிரி அளவுக்கு லேண்டர் சாதனம் திருப்பப்பட்டு, செங்குத்தாக தரைஇறங்கும்.நிலவில் லேண்டர் சாதனம் தரைஇறங்கியதும், அதன் வயிற்றில் இருந்து ரோவர் வாகனம் மெதுவாக தரையிறங்கும். ஒரு நிலவு நாளைக்குள் அனைத்து சோதனைகளும் செய்யப்படும்.அதன்பின், அங்கு வெளிச்சம் இருக்காது. கும்மிருட்டாக இருக்கும். மேலும், மைனஸ் 180 டிகிரி அளவுக்கு குளிராக இருக்கும். இந்த நேரத்தில், ரோவர் சாதனம் செயல்பட முடியாது. மீண்டும் வெளிச்சம் வந்து, ரோவர் உயிர் பெற்றால், மற்றொரு நிலவு நாள் அங்கு இருந்து சோதனை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்