உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலை-சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரியம் ஒப்பந்தம்

கோவை: சிங்கப்பூரில் உள்ள தேசிய பூங்கா வாரியத்துடன், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி, சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரிய முதன்மை செயற்குழு அதிகாரி லேங் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வேளாண் பல்கலை பட்டமேற்படிப்புக்கான டீன் சந்திரபாபு கூறுகையில், “ பன்னாட்டு கல்வி பரிமாற்றம், கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பு, கூட்டு ஆராய்ச்சி ஆகியவற்றை இணைந்து செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்,” என்றார். இந்த ஒப்பந்தத்தில், மாணவர்களின் ஆராய்ச்சி, பல்கலை விஞ்ஞானிகள் பரிமாற்றம், நகர்ப்புற தோட்டக்கலை, நகரை பசுமையாக்குதல், நகர்ப்புற சுற்றுச்சூழலுக்கான கூட்டுத்திட்டங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். வேளாண் பல்கலையில் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், தங்களது ஆராய்ச்சி பணிகளை சிங்கப்பூரில் உள்ள தேசிய பூங்காக்களில் மேற்கொள்ள முடியும். முதலாண்டு படிப்பை முடித்தவுடன் அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு,  ஆராய்ச்சியை மாணவர்கள் மேற்கொள்வர். தேர்வு செய்யப்பட்டமாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் தங்கும் செலவு, மாத உதவித்தொகையை தேசிய பூங்கா வாரியம் அளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்