பத்திரிக்கை செய்தி எதிரொலி: ஏழை மாணவிக்கு கிடைத்தது உதவி
சென்னை செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சி சிவந்தி ஆதித்தன் நகரைச் சேர்ந்தவர் பிரமலதா. இவரது மூத்த மகள் யுவஸ்ரீ (17). வடகரை அரசு ஆதி திராவிட நலத்துறை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த இவர், ஆண்டுத் தேர்வில் 1018 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். இவருக்கு விழுப்புரம் அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய கவுன்சிலிங்கில் இடம் கிடைத்தது. பி.இ., படிக்கும் ஆர்வத்துடன் கல்லூரி கனவுகளை சுமந்த இவர், குறைந்தபட்ச நுழைவுக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த முடியாமல் தவித்தார். இது குறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. தகவல் அறிந்த தமிழக முதல்வர் கருணாநிதி, உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 ஆயிரத்தை, அந்த மாணவியின் உயர்கல்விக்காக வழங்க உத்தரவிட்டார். இது தொடர்பாக, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:முதல்வர் உத்தரவின்படி, ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மாணவி யுவஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார். சமூக சேவகி தங்கம் நாகராஜ் மூலம், செங்குன்றம் அடுத்த அலமாதியில் உள்ள கோஜான் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திடமும் உதவி கேட்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 22ம் தேதி தினமலர் செய்தியைப் பார்த்த அக்கல்லூரி நிறுவனத் தலைவர் கோ.நடராஜன் மூலம், கோஜான் கல்வி அறக்கட்டளை சார்பில், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பில் சேர்ந்து படிக்க, மாணவி யுவஸ்ரீக்கு அட்மிஷன் உத்தரவு வழங்கப்பட்டது. இதன்மூலம், நான்கு ஆண்டுக்கான கல்விக் கட்டணம், தங்கும் விடுதி மற்றும் உணவுக் கட்டணம் என ரூ.4 லட்சத்து 15 ஆயிரம், அந்த மாணவிக்கு இலவசமாகி உள்ளது. இந்த உத்தரவை நேற்று காலை, கல்லூரியின் முதல்வர் சந்திரசேகர், இயக்குனர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலையில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பாபு வழங்கினார். மாணவி நெகிழ்ச்சி: “படிக்கும் ஆர்வம் இருந்தும், பணம் இல்லாத காரணத்தால், கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்தேன். ‘தெய்வம் சோதிக்கும்; ஆனால் கைவிடாது’ என்பது போல், எனது நிலை குறித்து தினமலரில் செய்தி வெளியானது. எனது கல்விக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று மாணவி யுவஸ்ரீ கூறினார்.