உள்ளூர் செய்திகள்

‘பிறருடன் நல்லிணக்கமாக வாழ கற்றுத்தரும் கல்வி வேண்டும்’

கோவை: கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது. இதில், சென்னை லயோலா கல்லூரியின் வர்த்தக நிர்வாக மைய இயக்குனர்  கிறிஸ்டி பேசியதாவது:ஊழல் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2006ம் ஆண்டு 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஊழல் பட்டியலில் 72வது இடம் இந்தியாவுக்கு கிடைத்தது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 70 வது இடத்தை பெற்றது. இன்றைய நிலையில் நல்ல மதிப்புக்களை கொண்டுள்ளவர்களே  இந்தியாவுக்கு தேவை. உலக அளவில் 10 பணக்காரர்களில் நான்கு பேர் இந்தியர். ஆனால் இந்தியாவில் தான் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் அதிகம் பேர் உள்ளனர். இந்தியாவில் மருத்துவ சுற்றுலா பிரபலமாக திகழ்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த பலர், இந்தியா வந்து சிகிச்சை  எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இங்கு தான் மலேரியா, காசநோய், குஷ்டம் உள்ளிட்ட நோய்கள் அதிகம். உலகிலேயே படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகம் இருப்பதும் இந்தியாவில்தான். வாழ்க்கைப்பாதையில் தடைகள் ஏராளமாக வரக்கூடும். அதை எதிர்கொண்டு குறிக்கோளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். ஜாதி, மதம், மொழி என பலவற்றால் பிரிக்கப்பட்டுள்ளது இந்திய சமூகம். இதைப் பயன்படுத்தி மக்களை சுரண்டும் வேலையை செய்கின்றனர் அரசியல்வாதிகள். மதம், இனம், மொழியின் பெயரால் நடக்கும் வன்முறையால் பலர் வாழ்வை இழக்கின்றனர். பிரச்னைகள் பல வந்தாலும், பிறருடன் நல்லிணக்கமாக வாழ கற்றுத்தரும் வகையில் கல்வி இருக்க வேண்டும். இவ்வாறு கிறிஸ்டி பேசினார். இந்த பட்டமளிப்பு விழாவில் நிர்மலா மகளிர் கல்லூரி முதல்வர் பவுலின் மேரி மற்றும் ஆசிரியர்கள், மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர். 4 மாணவியருக்கு தங்கப்பதக்கம்: பட்டமளிப்பு விழாவில் 510 மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டன. இதில் 436 பேர் இளநிலை மாணவியர்; 76 பேர் முதுநிலை மாணவியர். மொத்தம் 34 மாணவியர், கோவை பாரதியார் பல்கலை அளவில் ரேங்க் பெற்றனர். இதில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்த தன்யா மேனன், பி.சி.ஏ., படித்த வந்தனா மேனன், பி.எஸ்சி., கணிதம் படித்த லீனா, எம்.ஏ., வரலாறு படித்த மெரோஜ் லதா ஆகியோர் பல்கலை அளவில் முதல் ரேங்க் பெற்று, தங்கப்பதக்கம் பெற்றனர். இவர்களில் மாணவி லீனா, 12 பாடங்களில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்