கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளி மாணவி தற்கொலை
வாடிப்பட்டி: மதுரை அருகே கல்விக் கட்டணம் செலுத்தாததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட 7ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகள் வினிதா(12). அங்குள்ள வெங்கடாஜலபதி மெட்ரிக் பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்ததை தொடர்ந்து தாயார் மலர் கண்காணிப்பில் இருந்து வந்தார். தோட்டத்து வேலை செய்து வினிதாவை மலர் படிக்க வைத்தார். வறுமை காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கல்விக்கட்டணத்தை வினிதாவால் செலுத்த முடியவில்லை. நன்றாக படிப்பதால் பள்ளி நிர்வாகமும் அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், கல்வி கட்டணத்தை செலுத்திய பிறகு மீண்டும் பள்ளிக்கு வருமாறு பள்ளி நிர்வாகம் வினிதாவை வீட்டிற்கு அனுப்பியது. மனமுடைந்த அவர் மதியம் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.