தேர்வு முடிவு தாமதம்: எம்.பில்., படிக்க முடியாமல் தவிப்பு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை., தொலைக்கல்வியில் எம்.ஏ., தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு தேர்வு முடிவு தாமதமாவதால், ரெகுலர் கல்லூரிகளில் எம்.பில்., சேர்க்கைக்கு காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரை காமராஜ் பல்கலை.,யின் தொலைக் கல்வியில் பல ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களில் பலர் தொடர்ந்து எம்.பில்.,படிக்கச் செல்கின்றனர். தொலைநிலைக் கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் கடந்த மே மாதம் தேர்வு எழுதினர். இதுவரை எம்.ஏ., பொருளாதாரம், வரலாறு, காந்திய சிந்தனை போன்ற சில படிப்புகளுக்கே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. எம்.ஏ., தமிழ், ஆங்கிலம் போன்ற படிப்புகளுக்கு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் இம்மாணவர்கள் ரெகுலர் கல்லூரிகளில் எம்.பில்., சேர முடியவில்லை. கடந்த ஆண்டு முதல் தொலைக் கல்வியில் எம்.பில்., படிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் ரெகுலர் கல்லூரிகளில் தான் சேர்ந்தாக வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகளின் தாமதம் காரணமாக எம்.பில்., மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் இறுதிவரை நீடித்து இருப்பதாக வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் எம்.ஏ., தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு தேர்வு முடிவு வராத நிலையில், இந்த மாணவர் சேர்க்கைக்கான கால நீடிப்பை இன்னும் சில வாரங்களுக்காவது தள்ளி வைப்பதே நல்லது. இல்லையெனில் தாமத தேர்வு முடிவால் மாணவர்கள் அடுத்த ஆண்டுதான் எம்.பில்., படிப்பில் சேர முடியும். ஒரு ஆண்டு தேவையில்லாமல் வீணாகிவிடுமே என்று மாணவர்கள் வேதனையில் உள்ளனர். பல்கலை., துணைவேந்தர் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.