உள்ளூர் செய்திகள்

முதல் வகுப்பில் தேர்ச்சி சான்றிதழ்: பல்கலை.,க்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: இன்ஜினியரிங் பட்டத்தில் 63 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவருக்கு முதல் வகுப்பில் தேர்ச்சி சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்க அண்ணா பல்கலை., பதிவாளர் மற்றும் தேர்வாணையருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜேஷ்குமார் தாக்கல் செய்த மனு: சிரகனூர் ஸ்ரீ அங்காளம்மன் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2002ல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்தேன். 2003 நவ., வரை இடைவெளியின்றி படிப்பை தொடர்ந்தேன். வயிற்றில் சுரப்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றேன். குணமடைந்து 2004ல் கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தேன். என் உடல்நிலையை கூறி மருத்துவ விடுப்பு கேட்டு துறை தலைவருக்கு மனு செய்தேன். அவரும் மனுவை முதல்வருக்கு அனுப்பி கல்வி இடைநிறுத்த அனுமதி வழங்கினார். 2004 டிச.,முதல் 2007 நவ., வரை படிப்பை முடித்தேன். எல்லா பாடங்களிலும் சராசரியாக 63 சதவீத மார்க்குகளை பெற்றாலும் எனக்கு 2ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுகுறித்து கேட்ட போது அண்ணா பல்கலை., விதிகளுக்கு உட்பட்டு 2 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிலிருந்து எனக்கு விதிவிலக்கு அளித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்க முதல்வரும் சிபாரிசு செய்தார். படிப்பை நடுவில் நிறுத்த எவ்வித அனுமதியும் பெறவில்லை எனக்கூறி முதல் வகுப்பில் தேர்ச்சி சான்றிதழ் வழங்க முடியாது என அண்ணா பல்கலை., தேர்வாணையர் உத்தரவிட்டார். அதனை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கோரினார். இம்மனு நீதிபதி கே.சுகுணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சதீஷ்பாபு ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அண்ணா பல்கலை.,தேர்வாணையர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பதிவாளரும், தேர்வாணையரும் மனுதாரர் மருத்துவ விடுப்பில் சென்றதற்கான கடிதத்தை எடுத்து கொண்டு அதனை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்