உள்ளூர் செய்திகள்

இட நெருக்கடியில் தவிக்கும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்

திருவாடானை: திருவாடானை கலைக் கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் திட்டம் கிடப்பில் உள்ளதால் மாணவ, மாணவிகள் இடநெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். திருவாடானையில் கலைக்கல்லூரி கடந்தாண்டு துவங்கப்பட்டது. இப்பகுதி மாணவ, மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவாடானை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான கட்டடங்கள் ஒதுக்கப்பட்டு கல்லூரி துவக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வமாக சேர்ந்தனர். தற்போது 400 க்கு மேற்பட்டோர் சேர்ந்ததால் இட நெருக்கடி ஏற்பட்டது. அரசு மேல்நிலை பள்ளிக்கு சொந்தமான மேலும் சில வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டது. கல்லூரிக்கு சொந்தமாக இடம் தேர்வு செய்வதில் வருவாய்த்துறையினர் முனைப்பு காட்டினர். ஆனால், அரசு புறம்போக்கு இடம் இல்லாததால் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடம் தேர்வுசெய்ய ஆலோசனை செய்யபட்டது. திருவாடானை தர்மர் கோயில் அருகில் உள்ள இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த இடத்தை பார்வையிட்டு பல மாதங்கள் ஆகியும் கல்லூரி ஒதுக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. இதனால் இடநெருக்கடியில் மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். கல்லூரி முதல்வர் லதா கூறியதாவது: தற்போது அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளதால் இடம் நெருக்கடியாக உள்ளது. அடுத்த ஆண்டு கூடுதலாக மாணவ, மாணவிகள் சேர்ந்தால் கூடுதல் வகுப்பறைகள் தேவைபடும். இப்போதே சமாளிக்க முடியாத நிலையில், மாணவர்களின் நிலையை கேள்விக்குறியதாகிவிடும். மாவட்ட நிர்வாகம் விரைவில் இடம் தேர்வுசெய்து அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்கு முன் கட்டட பணிகளை முடிக்க வேண்டும், என்றார். அரசு மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ் கூறியதாவது: பள்ளிக்கு சொந்தமான வகுப்பறைகள் கல்லூரிக்கு கொடுக்கப்பட்டதால் பள்ளி மாணவர்களுக்கும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு வகுப்பறை கொடுக்கபட்டதால், கம்ப்யூட்டர் மற்றும் டைப் மெஷின்கள் வைக்க முடியாமல் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மாணவ, மாணவிகள் கூடுதலாக சேர்ந்தால் கடும் இடநெருக்கடி ஏற்படும், என்றார். மாணவ, மாணவிகளின் நலன் கருதி, கல்லூரிக்கு, விரைவில் இடம் தேர்வு செய்து சொந்த கட்டடத்தில் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்