ஜெர்மன் பல்கலையுடன் இணைந்து குழந்தைகள் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மையம்
காந்திகிராமம்: ஜெர்மன் பல்கலையுடன் இணைந்து காந்திகிராமத்தில் குழந்தைகள் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காந்திகிராம பல்கலை உலக நாடுகளுடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜெர்மனி ஹானவர் லிப்னிஸ் பல்கலையுடன் இணைந்து மனையியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக காந்திகிராம பல்கலை மனையியல் பேராசிரியர் புஷ்பா, உதவி பேராசிரியர் கவிதாமைதிலி ஆகியோர் ஜெர்மன் சென்றிருந்தனர். அங்கு ஹானவர் லிப்னிஸ் பல்கலை மொழி கற்பித்தல் துறை பேராசிரியர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் மூலம் ஜெர்மன் பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள் காந்திகிராமத்திற்கும், காந்திகிராமத்தில் இருந்து ஜெர்மனுக்கும் சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். மேலும் காந்திகிராம பல்கலையில் குழந்தை வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆரோக்கியம், வளர்ச்சி குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனை ஆய்வு செய்ய ஜெர்மன் பேராசிரியர்கள் ஜனவரியில் காந்திகிராமத்திற்கு வரஉள்ளனர். பேராசிரியர்கள் புஷ்பா, கவிதா மைதிலி கூறியதாவது: ’டிவி’ பார்ப்பது மூலம் குழந்தை களிடம் உரையாடுவது குறைந்து விட்டது. உரையாடுதல் மூலமாகத்தான் அவர்களின் வளர்ச்சி மேம்படுகிறது. இதை கண்டறிய குழந்தை இல்லங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம், என்றார்.