உள்ளூர் செய்திகள்

பார்வையற்ற மாணவர்களின் நலனில் அக்கறை காட்டும் டில்லி பல்கலை

புதுடில்லி: பார்வையற்ற மாணவர்களின் நலனுக்காக, பல்கலை நூலகங்களில், அதிநவீன தொழில்நுட்பத்தை அமல்படுத்தும் முயற்சியில், டில்லி பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. பார்வையற்ற மாணவர்கள், புத்தகங்களை படித்து, பாடங்களை அறிந்து கொள்வதற்காக, மற்றவரின் உதவியை எதிர்பார்க்கும் சூழல் உள்ளது. இதனால், அவ்வகை மாணவர்கள், பல நேரங்களில் சிரமத்திற்கு ஆளாக வேண்டி உள்ளது. பார்வையற்ற மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், பல்கலை நூலகங்களில், அதிநவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்த, டில்லி பல்கலை முன் வந்துள்ளது. அதன்படி, ’இன்குளூசிவ் பிரின்ட் அக்சஸ் புராஜக்ட்’ என்ற புதிய திட்டத்தை, பல்கலை நூலகங்களில் செயல்படுத்த துவங்கி உள்ளனர். இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும், அதிவேக ’லெக்சைர்’ கேமரா, புத்தகங்களில் இடம் பெற்றுள்ள பாடங்களை ஸ்கேன் செய்து, அதை வார்த்தை வடிவில் மாற்றம் செய்து தரும். இதனால், பார்வையற்ற மாணவர்கள், மற்றவரின் உதவியின்றி, தங்கள் பாடங்களை செவி வழியாகக் கேட்டு, படித்து முடிக்க முடியும். இத்திட்டத்தை, பல்கலைக்கு சொந்தமான அனைத்து துறை நூலகங்களிலும் அமல்படுத்தும் பணியில், டில்லி பல்கலை நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. தற்போது, ஆங்கிலம், இந்தி மொழிகளில் உள்ள பாடங்களை, அதிநவீன கேமராவின் மூலம் செவி வழிப்பாடங்களாக கற்க முடியும். இத்திட்டம் ஏற்கனவே வெளிநாடுகளில் அமலில் உள்ள போதிலும், நம் நாட்டில், முதல் முறையாக டில்லி பல்கலையில் செயல்படுத்தப்பட்டுஉள்ளது. தேவைக்கேற்ப, மற்ற பல்கலைகளும், இந்த திட்டத்தை செயல்படுத்தினால், ஏராளமான பார்வையற்ற மாணவர்கள் பயனடைவார்கள் என, டில்லி பல்கலை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்