பிஎச்.டி., படிப்பின் முக்கியத்துவம் என்ன... சிந்திக்குமாறு கவர்னர் அட்வைஸ்
சென்னை: உயர்கல்வியை பொறுத்தவரை, இந்தியாவில் தமிழகம் இரண்டு மடங்கு உயர்ந்து காணப்படுகிறது என தமிழக கவர்னர் ரவி கூறினார்.தொழில் முனைவோர் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மையம், சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய, தொழில் முனைவு மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான மாநாட்டை, தமிழக கவர்னர் ரவி, சென்னையில் துவக்கி வைத்தார்.இதில், கவர்னர் ரவி பேசியதாவது:சுதந்திரத்திற்கு பின் நம் நாடு, பல்வேறு முன்னேற்றம் அடைந்துள்ளது. தீண்டாமை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம், மருத்துவம் என, அபார வளர்ச்சி கண்டுள்ளது. ஆசிய கண்டத்தில், சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது.இந்தியாவின் வளர்ச்சி மீது உலக அளவில், பெரிய அளவு எதிர்பார்ப்பு உள்ளது. அதிக தொழில் முனைவோர் கொண்ட நாடாகவும், இந்தியா இருக்கிறது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், அபார வளர்ச்சி அடைந்து உள்ளது. சாலையோர கடைகளில் கூட, டிஜிட்டல் பரிவர்த்தனையை பார்க்க முடிகிறது.தொழில்நுட்ப வளர்ச்சியில், அனைத்து துறைகளிலும் முன்னேறும் தருணம் இது. கிராமங்களின் வளர்ச்சியில், தனிக்கவனம் செலுத்த வேண்டி உள்ளது. கல்வி, மனித வளத்தில் தமிழகம், கேரளா முன்னணியில் உள்ளது.உயர்கல்வியை பொறுத்தவரை, இந்தியாவில் தமிழகம் இரண்டு மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. பொருளாதார முன்னேற்றத்தில் அடுத்தக்கட்ட வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், சிந்தனைகளில் மாற்றம் தேவை.இந்தியாவில் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், வேலை தேடுபவர்களாக அதிகம் பேர் உள்ளனர். வேலையை உருவாக்குபவர்களாக பெரிய அளவில் இல்லை.மாணவ - மாணவியரை சந்தித்து உரையாடும்போது, பெரும்பாலானோர் வேலை தேடுவதாக கூறுகின்றனர். அதுவும், அரசு வேலை தேடுவதாக பலர் கூறினர். தொழில் முனைவோராகி வேலை கொடுப்பவராக ஆக விரும்பவில்லை.வேலை வாய்ப்புகள் தான், அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு உதவும். சமூகமும் மகிழ்ச்சியுடன் இருக்கும். ஆண்டுக்கு, 1,500 பேர் பிஎச்.டி., படிப்பை முடிக்கின்றனர். அவர்களும், 15,000 ரூபாய் ஊதியத்தில், கவுரவ பேராசிரியராக பணிபுரிகின்றனர்.எதற்காக ஆராய்ச்சி படிப்பு படிக்கிறோம் என தெரிந்து, படிக்க வேண்டும். ஏதோ படிக்க வேண்டும் என்பதற்காக படிக்கக்கூடாது. ஆசிரியர்களும், மாணவ - மாணவியரை வளர்ச்சி பாதையில் செல்லும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மைய தலைவர் சேத்தன், ஐ.ஐ.டி., பிரவர்தக் டெக்னாலஜி அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் ராமன், ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் மகேஷ் பஞ்சகுனுலா, கவுரவ் ரெய்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.