உள்ளூர் செய்திகள்

சங்க இலக்கியத்துக்கு உ.வே.சா., போல சங்க நாணயத்துக்கு இரா.கிருஷ்ணமூர்த்தி

சென்னை: சங்க இலக்கியங்களை உ.வே.சாமிநாத அய்யர் தேடி சேகரித்தது போல, சங்க கால நாணயங்களை தேடி சேகரித்தவர், &'தினமலர்&' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி என தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி பாராட்டினார்.சென்னை பெசன்ட் நகரில் உள்ள, டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் நுாலகத்தில், உ.வே.சா.,வின், 170வது பிறந்த நாள் விழா, அகநானுாறு - மூலமும் உரையும் நுால் வெளியீட்டு விழா, உ.வே.சா.,வின் பன்முக ஆளுமைகள் என்ற கருத்தரங்கம் ஆகியவை நேற்று நடந்தன.ஒலிக்கு ஏற்ப எழுத்துஅகநானுாறு மூலமும் உரையும் நுாலை, தினமலர் நாளிதழின் பட்டம் மாணவர் பதிப்பு ஆசிரியர் ஆர்.வெங்கடேஷ் வெளியிட, சேக்கிழார் ஆய்வு மைய செயலர் சிவாலயம் ஜெ.மோகன் பெற்றுக்கொண்டார்.நிகழ்வில், மத்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளரும், உ.வே.சா., நுாலகத்தின் செயலருமான சத்தியமூர்த்தி பேசியதாவது:சமஸ்கிருதம் உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. ஆனால், அதற்கான தனி எழுத்து வடிவம் இல்லாததால், பல்வேறு மொழிகளுடன் கலந்து, அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டுள்ளது.உலக செம்மொழிகளில் ஒன்றான தமிழ்மொழிக்கு, தனித்தனி ஒலிக்கு ஏற்ப எழுத்துக்கள் உள்ளன. அதனால், சங்க இலக்கிய காலத்தில் இருந்து தற்போது வரை, சரியான உச்சரிப்பில் தமிழை பேச முடிகிறது. இன்று நாம் எழுதும் எழுத்து பல்வேறு நிலைகளுக்கு பின் வளர்ச்சி அடைந்துள்ளது.தமிழுக்கு தொன்மையும், தொடர்ச்சியும் உள்ளது என்பது, சங்க இலக்கியங்கள் பதிப்பிக்கப்பட்ட பின் தான் தெரியும்.அந்த சங்க இலக்கியங்களை தேடித் தொகுத்தவர் உ.வே.சாமிநாத அய்யர். அந்த நுால்களை அடிப்படையாக வைத்து, சங்க கால நாணயங்களை தேடி தொகுத்தவர், &'தினமலர்&' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி. அத்துடன், இன்றைய சீர்திருத்தப்பட்ட எழுத்துக்களை முதலில் அச்சில் ஏற்றியவரும் அவர் தான். இவ்வாறு அவர் பேசினார்.சுவடிகள் ஆய்வுசிவாலயம் மோகன் பேசுகையில், நான், உ.வே.சா.,வின் வாரிசுகளுடன் பழகி, அவரின் வீட்டில் உலவியவன். உ.வே.சா., குறித்தும், அவரின் பணிகள் குறித்தும், எனக்கு பல கதைகள் தெரியும். இன்ஜினியரான என்னை தமிழ்ப்பணிக்கு திருப்பியவர் அவர் தான் என்றார்.நுாலை வெளியிட்டு, தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் ஆசிரியர் வெங்கடேஷ் பேசுகையில், உ.வே.சா., சேகரித்த ஓலைச்சுவடிகளை, மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். உ.வே.சா.,வின், என் சரித்திரம் நுாலை படித்து தான், தனித்த எழுத்து நடையை எழுத்தாளனாக பயன்படுத்த துவங்கினேன். அந்த அனுபவங்கள் பதிப்பு துறையிலும் எனக்கு கைகொடுத்தன என்றார்.18ம் நுாற்றாண்டின் தமிழகவரலாற்றை அறிய என் சரித்திரம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத்தலைவர் இ.சுந்தரமூர்த்தி பேசியதாவது: உ.வே.சாமிநாத அய்யர் கடுமையான உழைப்பாளி; எளிதில் அணுகக்கூடியவர். திருவாவடுதுறை ஆதீன வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம், அவர் இலக்கண, இலக்கியங்களை கற்றார். சங்க இலக்கியங்களில், 15 நுால்களை பதிப்பித்து, தமிழுக்கு பெருந்தொண்டாற்றியவர்.தான் சேகரித்த ஓலைச்சுவடிகளை தன் குழந்தையாகவே பாவித்தார். தமிழ் நுால் பதிப்பை பொறுத்தவரை 1812ல், திருக்குறள் மூலபாடம் எனும் நுால் அச்சிடப்பட்டது. அது தஞ்சை நகரம், மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிரகாசனால் பதிப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, 1887ல் சி.வை.தாமோதரம் பிள்ளை, &'கலித்தொகை&'யை அச்சிட்டார்.அவர்களைத் தொடர்ந்து, சங்க இலக்கியத்தின் 15 நுால்களை உ.வே.சா.,தான் பதிப்பித்தார். அவர், அதற்காக பட்ட அவமானங்களையும், கஷ்டங்களையும் என் சரித்திரம் என்ற, தன் சுயசரிதை நுாலில் எழுதினார். அதேபோல், தன் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வரலாற்றையும் எழுதினார். அவை இரண்டும், 18, 19ம் நுாற்றாண்டுகளில், தமிழக வரலாற்றை அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்