உள்ளூர் செய்திகள்

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வு எழுதிய மாணவி

திருக்கோவிலுார்: தந்தை இறந்த சோகத்தில் இருந்த மாணவியை உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆறுதல் கூறி 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத வைத்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராமு,38; காட்டுச்செல்லுாரில் உள்ள ரமணா பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் வாகன நிர்வாக மேலாளராக பணி புரிந்து வந்தார்.இவருக்கு கவிதா,34; என்ற மனைவியும், நிதர்தனா,17; மோகனப்பிரியா, 15; என்ற மகள்களும், சேரல்நாதன்,13; சரவணபாண்டியன்,11; என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் 4 பேரும் தந்தை ராமு பணிபுரியும் பள்ளியில் முறையே பிளஸ் 2, 10, 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். தற்போது சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.நேற்று 10ம் வகுப்பிற்கு ஆங்கில தேர்வு நடந்தது. இதற்காக மாணவி மோகனப்பிரியா தயாராகி வந்த நிலையில், அவரது தந்தை ராமு நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை நேற்று அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.அதேநேரத்தில் உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள் மோகனப்பிரியாவை தேற்றி, நேற்று நடந்த ஆங்கில தேர்விற்கு அனுப்பி வைத்தனர். தேர்வு மையத்தில் இருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மோகனப்பிரியாவிற்கு ஆறுதல் கூறி, தேர்வு எழுத ஏற்பாடு செய்தனர். மதியம் தேர்வு முடிந்ததும், உறவினர்களுடன் வீட்டிற்கு சென்ற மோகனப்பிரியா தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.இந்நிலையில், இறுதிச் சடங்கில் பங்கேற்ற பள்ளியின் தாளாளர் சுனில்குமார், ராமுவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, மாணவர்களின் படிப்பு செலவை பள்ளி நிர்வாகமே ஏற்கும் என உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்