உள்ளூர் செய்திகள்

காலை உணவில் இட்லி, தோசை! திட்டக்குழு பரிந்துரைகள் என்ன?

சென்னை: மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள, 11 மதிப்பீடு மற்றும் ஆய்வு அறிக்கைகளை, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். நிகழ்வின் போது, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலர் ரமேஷ்சந்த் மீனா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.அறிக்கை குறித்து ஜெயரஞ்சன் அளித்த பேட்டி:அரசு பள்ளிகளில், 60 முதல் 70 சதவீதமாக இருந்த மாணவர்கள் வருகை, காலை உணவு திட்டத்திற்கு பின், 90 சதவீதத்துக்கு மேலாக உயர்ந்துள்ளது. மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு செல்கின்றனர்; உணவை விரும்பிச் சாப்பிடுகின்றனர்; அவர்களிடம் சோர்வு இல்லை என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். பெற்றோர் மற்றும் குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இட்லி, தோசை வழங்க முடியுமா என்று கேட்கின்றனர். இது, பெரிய வேலை என்பதால், யோசித்து செய்ய வேண்டி உள்ளது.நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் மெட்ரோ நகரங்களுக்கு தேவை இல்லை. நகர்ப்புற எல்லையில் உள்ள பகுதிகளுக்கு, அதிக தேவை உள்ளது. நகராட்சிகளில் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதுஅரசு திட்டங்கள், பழங்குடியின கிராமங்களை சென்றடைவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். பழங்குடியின கிராமங்கள் கண்காணிப்பு இல்லாமல் இருப்பது பின்னடைவு.சீமைக் கருவேல மரங்களை ஒரே நேரத்தில் அகற்ற முடியாது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கண்காணிக்க வேண்டும். இதை மக்கள் இயக்கமாக மாற்றினால் மட்டுமே சாத்தியம். மக்களை தேடி மருத்துவம், நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் பயன்கள் குறித்து அறிக்கை அளித்து உள்ளோம்.உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த, தேர்வு வினாத்தாள் எப்படி உள்ளது; மாணவர்களின் திறமையை சோதிக்கும் கேள்விகள் உள்ளதா என ஆய்வு செய்து, அதன் முடிவுகளை தெரிவித்துள்ளோம். ஆண்டுதோறும் வெப்பம் அதிகரிக்கிறது. அதை எதிர்கொள்வது எப்படி, மக்களை பாதுகாக்க செய்ய வேண்டியது குறித்தும் அறிக்கை கொடுத்துள்ளோம்.காடுகள் பச்சை பாலைவனங்களாக மாறி வருகின்றன. ஒன்று அல்லது இரண்டு செடி வளர்ந்து, மற்றவற்றை காலி செய்கிறது. இதனால், மற்ற தாவரங்கள் அழிந்து போகும் நிலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த பிரச்னை உள்ளது. துறை வல்லுனர்களிடம் கருத்து கேட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.கடற்பாசியை வணிகம் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. இது, மற்ற கடல் தாவரங்களை அழித்து விடும் என்ற கருத்து உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளோம். தமிழகத்தில் காடுகளின் தற்போதைய நிலை குறித்தும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்