பிரான்ஸில் டெக்ஸ் வேர்ல்டு கண்காட்சி: ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
திருப்பூர்: பிரான்ஸில் நடக்கும், டெக்ஸ் வேர்ல்டு - 2024 கண்காட்சியில் பங்கேற்று, புதிய வர்த்தக வாய்ப்புகளை பெறலாம் என, ஏ.இ.பி.சி., எனும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி மற்றும் பின்னலாடை ஏற்றுமதியில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன்படி, நம் நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில், அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் ஜெர்மனியும், மூன்றாவது இடத்தில் பிரான்சும் உள்ளன.ஜப்பான் மற்றும் பிரிட்டனை காட்டிலும், பிரான்சுடன் அதிக பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி, பிரான்சின் ஆயத்த ஆடை இறக்குமதி வர்த்தகம், 2.20 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, வரும் ஆண்டுகளில் மேலும் உயர வாய்ப்புள்ளது.இந்தியாவின், பிரான்ஸ் நாட்டுக்கான ஜவுளி ஏற்றுமதி, 9,782 கோடி ரூபாயாக அதாவது, 4.44 சதவீதமாக இருக்கிறது. இது, 6 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக, மத்திய ஜவுளித்துறை கணக்கிட்டுள்ளது. இதற்கிடையில், பிரான்சில் நடக்க உள்ள, 'டெக்ஸ் வேர்ல்டு' கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, நாட்டுக்கு புதிய வர்த்தக ஆர்டர்களை ஈர்க்கலாம் என, ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில், ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை, 'டெக்ஸ் வேர்ல்டு - 2024' சர்வதேச ஜவுளி கண்காட்சியால் நடக்கிறது. இந்தியாவுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாகும் நேரத்தில், பிரான்சில் நடக்கும் கண்காட்சியால், பின்னலாடை ஏற்றுமதியாளருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.சீனா, வங்கதேசம், துருக்கி, இத்தாலி, வியட்நாம், கம்போடியாவை காட்டிலும், இந்தியாவின் பிரான்ஸ் ஏற்றுமதி குறைவாக இருக்கிறது. பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பத்தை பின்பற்றும் இந்திய ஏற்றமதியாளர்கள், புதிய ஆர்டர்களை ஈர்க்க, இக்கண்காட்சி பேருதவியாக இருக்கும். மேலும் விபரங்களுக்கு, www.aepcindia.com என்ற இணையதள முகவரியில் அணுகலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.