பசுமைப் பரப்பை அதிகரிக்க குறுங்காடுகள்; தமிழக அரசு உத்தரவு
உடுமலை: தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக, தொழில் நிறுவனங்கள் நிதி பங்களிப்புடன், ஆயிரம் குறுங்காடுகள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் நிலப்பரப்பில், 23.8 சதவீதம் மட்டுமே வனம் மற்றும் பசுமைப் பரப்பு உள்ளது. இதை, 2030 - 31ம் நிதி ஆண்டுக்குள், 33 சதவீதமாக அதிகரிக்க, மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக, தொழிற்சாலைகள் பங்களிப்புடன், தமிழகத்தில், 1,000 இடங்களில், குறுங்காடுகள் அமைக்க வேண்டும். இதற்கு, அரசு புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகளின் கரைகள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள் என, நிலம் தேர்வு செய்யப்பட வேண்டும்.வேம்பு, ஆலமரம், அரசமரம், ஆயமரம், இலுப்பை, மா, கொய்யா, நாவல், பூவரசு, மகிழம், வில்வம் உட்பட 21 வகையான நாட்டு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.ஒவ்வொரு மரக்கன்றுகளும், 8- 10 வயதுடையதாகவும், 7 அடி வரை உயரம் உள்ளதாகவும் இருக்கவும், வனத்துறை மேற்பார்வையுடன் நடப்படும் பகுதியை சுற்றிலும் கம்பி வேலி பாதுகாப்பு, நீர் வசதி மற்றும் பராமரிப்பு தொழிலாளர்கள் நியமித்து, சிறிய வனமாக உருவாக்க வேண்டும்.இந்தத் திட்டம் முழுதும், நில அமைப்பு தகவல்களுடன் டிஜிட்டல் ஆவணங்களாக பராமரிக்க வேண்டும்.இதை மூன்றாவது நபராக, வேளாண் பல்கலை வாயிலாக கண்காணிக்கவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குறுங்காடுகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.