மாணவி கொலை வழக்கு; விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்
குடகு: குடகில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உறுதி அளித்தார்.குடகு சோம்வார்பேட் சூர்லப்பி கிராமத்தில் வசிக்கும் தம்பதி மகள் மீனா, 16. திருமண விவகாரத்தில் கடந்த 10ம் தேதி மீனாவை, ஓம்காரப்பா, 32 என்பவர் கொலை செய்து தலையை துண்டித்தார். அவர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், கொலையான மீனா வீட்டிற்கு நேற்று நேரில் சென்றார். மீனாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.பின்னர் அவர் அளித்த பேட்டி:இந்த கொலை சம்பவத்தை பொறுத்து கொள்ள முடியாது. வழக்கை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அமைப்போம். உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு நீதி கிடைக்க, அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், நிவாரணம் வழங்குவது பற்றி எதுவும் பேச முடியாது. ஹூப்பள்ளி அஞ்சலி கொலையில் போலீஸ் அதிகாரிகள் மீது, தவறு இருந்தால் நடவடிக்கை எடுப்போம்.ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக இருந்த போது, எத்தனை கொலைகள், கற்பழிப்பு, குற்ற செயல்கள் நடந்தது என்று எங்களுக்கு தெரியும். அவர் காங்., அரசை பற்றி பேசுகிறார். எங்களுக்கு அவரது சான்றிதழ் தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.