கம்மியானது பாடவேளை டம்மியானது தமிழ்...! பேராசிரியர்கள் அதிருப்தி
கோவை: அனைத்து இளநிலை பாடப் பிரிவுகளுக்கும், இரண்டாண்டுகள் தமிழ் மொழிப் பாடவேளை நேரத்தை 6 மணி நேரமாக உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி, உயர்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலர் கார்த்திக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து, பாரதியார் பல்கலைக்கழக இணைவுபெற்ற கல்லூரிகளின் தமிழ்ப் பேராசிரியர்கள் கூட்டியக்கம் சார்பில், அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இளநிலைப் பட்ட வகுப்புகளில் கணினி அறிவியல், ஐ.டி., கணினிப் பயன்பாட்டியல், வணிகவியல் உள்ளிட்ட துறைகளுக்கு, ஓராண்டு மட்டுமே பகுதி 1 தமிழ் மொழிப் பாடத்தை வழங்கி வந்த சில பல்கலைக்கழகங்கள், அனைத்துப் பட்ட வகுப்புகளுக்கும், இரண்டு ஆண்டுகள் தமிழ் மொழிப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களும் நடப்பு கல்வியாண்டு முதல் இரண்டாமாண்டு தமிழ் மொழிப் பாடத்துக்கு அரசு, யு.ஜி.சி., விதிகளுக்கு உட்பட்டு வாரத்துக்கு 6 மணி நேர பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலைக்கழகமும் இதனை நடைமுறைப்படுத்தியது. ஆனால், பட்ட வகுப்புகளுக்கான பாடத்திட்டக் குழுக்கள் யுஜிசி விதிகளையும், அரசின் ஆணையையும் மீறி, இரண்டாமாண்டு தமிழ் மொழிப் பாடத்துக்கான பாடவேளை நேரத்தை, 4 மணி நேரமாகக் குறைத்து, நடைமுறைப்படுத்தி உள்ளது. நான் முதல்வன் திட்டத்துக்காக, இந்த இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.இப்பிரச்னையில், பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் உரிய முடிவுகளை எடுத்து, ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பாடத்திட்டங்களுக்கு, ஒப்புதல் வழங்கும் முன், அனைத்துப் பட்ட வகுப்புகளுக்கும் பகுதி 1 தமிழ் மொழிப் பாடத்துக்கு, 6 மணி நேர பாடவேளையை உறுதி செய்ய வேண்டும்.அனைத்து இணைவுபெற்ற கல்லூரிகளிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் தமிழ் மொழிப்பாட வகுப்புகளுக்கு, 6 மணி நேரம் ஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்துவதையும், பல்கலைக்கழகம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.