நடிகை தமன்னா பாடம்; பள்ளி மீது பெற்றோர் புகார்
பெங்களூரு: நடிகை தமன்னா தொடர்பான பாடத்தை பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ள சிந்தி உயர்நிலைப் பள்ளி மீது, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.பெங்களூரின் ஹெப்பாலில் சிந்தி உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஏழாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகை தமன்னா, நடிகர் ரன்வீர் சிங் உட்பட முக்கியமான சிந்தி சமுதாயத்தினர் பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. தமன்னா தொடர்பான பாடத்துக்கு மட்டும், எதிர்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், பெற்றோர் புகார் அளித்து உள்ளனர். இதில், பிள்ளைகள் நடிகையின் பாடத்தை கேட்ட பின், இவரை பற்றி சமூக வலைதளத்தில் அதிகமான தகவலை தேடுகின்றனர். இந்த வயதில் தேவையற்ற விஷயங்களில் ஈர்க்கப்படும் அபாயம் உள்ளது. எனவே நடிகை தமன்னா பற்றிய பாடத்தை நீக்க வேண்டும் என கோரியுள்ளனர்.பள்ளி நிர்வாகம் கூறுகையில், ஏழாம் வகுப்பின் பாடம், 1947 முதல் 1962 வரையிலான அத்தியாயம். சிந்தி சமுதாயத்தினர் வாழ்க்கை, அவர்கள் புலம் பெயர்ந்தது உட்பட பல விஷயங்கள் அடங்கியுள்ளது. சிந்தி மொழியினர் கலாசாரத்தை, மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில், தமன்னா தொடர்பான விஷயங்களை பயன்படுத்தினோம். இதில் எந்த குளறுபடியும் இல்லை என்றனர்.