ஹீரோவாக மாறும் மாணவர்கள் நகரில் டூ-வீலரில் அத்துமீறல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், விதிமீறி டூ-வீலர்களில் வலம் வரும் பள்ளி மாணவர்களால், பாதசாரிகள் மற்றும் பிற வாகன ஓட்டுநர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியர் சிலர், டூ-வீலர்களில் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.'18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது குற்றம் என்று தெரிந்தும், பெற்றோர்கள் சிலர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு டூ-வீலர்களில் அனுப்பி வைக்கின்றனர்.இவர்களில் சில மாணவர்கள், தங்களது நண்பர்களுடன் டூ-வீலர்களில், மூன்று பேர் வரை அமர்ந்து அதிவேகமாக செல்கின்றனர். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரத்தில், மக்கள் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், நகரின் முக்கிய வீதிகளில், தங்களை சினிமா ஹீரோவாக உருவகப்படுத்தி அட்ராசிட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பாதசாரிகள் மற்றும் பிற வாகன ஓட்டுநர்கள், அச்சத்துடன் செல்கின்றனர்.தன்னார்வலர்கள் கூறியதாவது:பொள்ளாச்சியில், டூ-வீலரில் அத்துமீறும் பள்ளி மாணவர்களால், பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதேபோல, குடியிருப்பு பகுதிகளில், 'டியூஷன்' செல்லும் மாணவ, மாணவியரும் டூ-வீலரையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.ஓட்டுநர் உரிமம் இன்றி, ெஹல்மெட் அணியாமல், போக்குவரத்து விதிகளை அறியாமல், மாணவர்கள் வேகமாக வாகனத்தை ஓட்டுகின்றனர். போக்குவரத்து போலீசார் இத்தகைய மாணவர்களை கட்டுப்படுத்துவதுடன், அவர்களின் பெற்றோர்களிடம் அசாதாரண சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.