எந்தெந்த நாளில் என்னென்ன போட்டிகள்! அட்டவணை தயாரிப்புக்கு கூட்டம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கிழக்கு மற்றும் மேற்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி நடத்தப்படவுள்ள நிலையில், அட்டவணை தயாரிப்பதற்கான கூட்டம் நேற்று நடந்தது.பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவியருக்கான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அவ்வகையில், குறுமைய, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில், 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் கீழ், மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கோட்டூர் குறுமைய அளவிலான போட்டிகளை திவான்சாபுதுார் அரசு பள்ளி, கிழக்கு குறுமைய போட்டிகளை சிறுகளந்தை விக்னேஸ்வரா மெட்ரிக் பள்ளி, மேற்கு குறுமைய போட்டிகளை கோபாலபுரம் எம்.எம்.எஸ்., பள்ளியும் நடத்துகிறது.அதன்படி, தனிநபர், குழு விளையாட்டு போட்டி நடத்துவதற்கான அட்டவணை தயாரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.எம்.எம்.எஸ்., பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு, பள்ளி செயலாளர் விஜயலட்சுமி, முதல்வர் கிரிஜா ஆகியோர் தலைமை வகித்தனர். உடல்கல்வி ஆசிரியர்கள், பத்மநாபன், கவின், இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல, விக்னேஸ்வரா வித்யா பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு பள்ளித் தாளாளர் சரோஜினி தலைமை வகித்தார். பொள்ளாச்சி கிழக்கு குறுமையச் செயலாளர் வெங்கடாசலம் அனைவரையும் வரவேற்றார். 50க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், விளையாட்டு போட்டிகளுக்கான விதிகளை, போட்டி துவங்கும் முன்பாக மாணவர்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும். போட்டி நடக்கும் மைதானத்தில் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு, குடிநீர் வசதி, நிழலுக்கு சாமியானா பந்தல் உள்ளிட்டவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.