எமிஸ் பணிகளை மேற்கொள்வதில் மீண்டும் சிக்கல்; ஆசிரியர்கள் அதிருப்தி
உடுமலை : அரசு பள்ளி எமிஸ் பணிகளைமேற்கொள்வதில், மீண்டும் சிக்கல் தொடர்வதால், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.அரசுப்பள்ளிகளில், மாணவர்களின் எடை உயரம் உட்பட உடல்நலம் சார்ந்த பதிவுகள், முகவரி, புகைப்படம், கல்வித்தரம், வகுப்பு உள்ளிட்ட கல்வி சார்ந்த தகவல்கள், பள்ளியின் கட்டமைப்பு, அரசின் நலத்திட்டங்களில் பயன் பெற்றவர்கள், உதவித்தொகை பெறுவோர் உட்பட அனைத்து தகவல்களும், தற்போது பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளமான எமிஸில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவதுடன், இப்பதிவுகளை மேற்கொள்வதற்கும் முக்கியமான பணியாக உள்ளது. எமிஸ் இணையதளம் வாயிலாக, கடைக்கோடி அரசு பள்ளி குறித்தும் மாநில அளவில் அறிந்துகொள்ள முடியும் என்பதால், இந்த இணைதயளப்பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இப்பணிகளால் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்படுவதுடன், சர்வர் பிரச்னை, பதிவுகளை மேற்கொள்வதில் தாமதம் என, ஆசிரியர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இப்பிரச்னைக்கு தீர்வாக, நடப்பு கல்வியாண்டில் எமிஸ் பணியாளர்கள் நியமிப்பதற்கு நேர்முக தேர்வுகள் நடத்தி, பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இப்பணியாளர்கள், உயர்தர ஆய்வக வசதி உள்ள பள்ளிகளில் இருந்து, அதன் அருகிலுள்ள குறிப்பிட்ட மற்ற பள்ளிகளுக்கான எமிஸ் பணிகளையும் செய்வதற்கு நியமிக்கப்பட்டனர். பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒரு மாத காலமும் நிறைவடைந்துள்ளது.ஆனால் தொடர்ந்து துவக்க, நடுநிலைப்பள்ளிகளின் எமிஸ் பணிகளை ஆசிரியர்கள் தான் மேற்கொண்டு வருகின்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:ஒரு மாதமான நிலையிலும் இப்பணிகளை மேற்கொள்ள, புதிய பணியாளர்கள் மறுக்கின்றனர். அது குறித்து முறையான அறிவிப்பு அவர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறுகின்றனர்.கல்வியாண்டின் துவக்கத்தில் தான் அதிகமான பணிகள் இருக்கும். தற்போது அதை ஆசிரியர்கள் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கல்வித்துறை எமிஸ் பணிகளை புதிய பணியாளர்கள் செய்வதற்கு, முறையான அறிவிப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.