துணைவேந்தர் தேர்வு விவகாரம் தமிழக அரசுக்கு ராமதாஸ் ஆதரவு
சென்னை: காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப, பொது பல்கலை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என, தமிழக அரசுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இவை தவிர, மேலும் இரு பல்கலை துணைவேந்தர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான பணிகள் உடனடியாக துவங்கப்படவில்லை எனில், அடுத்த ஆண்டிற்குள், 10க்கும் மேற்பட்ட பல்கலைகள் துணைவேந்தர் இன்றி தடுமாறும் நிலை உருவாகும். துணைவேந்தர் தேர்வுக் குழுவில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்ப்பது குறித்து கவர்னருக்கும், அரசுக்கும் ஏற்பட்டுள்ள மோதலால் தான் துணைவேந்தர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள எந்த பல்கலையின் விதிகளிலும், துணைவேந்தர் தேர்வுக் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்ற பிரிவு இல்லை. எனவே, இப்பிரச்னையில் தமிழக அரசின் நிலையே சரியானது. தேடல் குழு அமைக்கும் அதிகாரமும் கவர்னருக்கு இல்லை.துணைவேந்தர் தேர்வுக் குழு, ஆட்சிக் குழு, பேரவைக் குழு ஆகியவற்றை நியமிக்கும் முறைகள், அதிகாரம் குறித்த விதிகள் ஒவ்வொரு பல்கலைக்கும் மாறுபடுகின்றன. எனவே, அனைத்து பல்கலைகளுக்கும் ஒரே மாதிரியான விதிகளை உருவாக்கும் வகையில், பொது பல்கலை சட்டத்தை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.