அரசு பள்ளி ஆசிரியர் இருவருக்கு மாநில நல்லாசிரியர் விருது
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தாலுகாவில் இரண்டு அரசு ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கியுள்ளது.காரமடை அடுத்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் அருள்சிவா. இப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவுக்கு ஆசிரியர் இல்லாததால், அந்தப் பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார். இவர், 34 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற இவர் தேர்வு பெற்றார்.சிறுமுகை அருகே, லிங்காபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் சிவக்குமார். இப்பள்ளியில் பழங்குடி இன குழந்தைகள் அதிக அளவில் படிக்கின்றனர். இவர்களுக்கு கணித பாடத்தை எளிதில் புரியும் படி கற்பித்து வருகிறார். மேலும் மாணவர்களின் வீட்டிற்கு சென்று பயிற்சியும் கொடுத்து வந்துள்ளார். தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற இவர் தேர்வு பெற்றார்.சென்னையில் தமிழக அரசு சார்பில் நடந்த, மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில், ஆசிரியர்கள் அருள்சிவா, சிவக்குமார் ஆகிய இருவருக்கும், அமைச்சர் அன்பில் மகேஷ் விருது மற்றும் தலா, 10 ஆயிரம் ரூபாயையும் வழங்கி உள்ளார். இரண்டு ஆசிரியர்களும் தாங்கள் பணியாற்றி வரும் பள்ளி வளர்ச்சிக்காக, அந்த தொகையை வழங்கி உள்ளனர்.பாராட்டுமுத்துக்கல்லூர் கல்வி வளர்ச்சி குழுவின் சார்பில், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் அருள்சிவாவிற்கு, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வரவேற்பும், பாராட்டும் அளிக்கப்பட்டது. கல்வி வளர்ச்சி குழு தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன் வரவேற்றார். வளர்ச்சி குழு பொருளாளர் செந்தில்குமார் மற்றும் பழனிசாமி, ஜோதிமணி, கருப்புசாமி குணசேகரன் கண்ணன் ஆகிய நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.