கல்வியாண்டு இடையில் பள்ளி கட்டணம் உயர்த்த தடை
சென்னை: கீழ்கட்டளையில் ஹோலி ஏஞ்சல்ஸ் எனும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்கு முன்னறிவிப்பும் எதுவும் தெரிவிக்காமல், திடீரென கட்டணத்தை உயர்த்தியது.ஒன்றாம் வகுப்புக்கு, 4,000 ரூபாய் இருந்த நிலையில், 9,500 ரூபாய்; 5ம் வகுப்புக்கு, 4,500 ரூபாயில் இருந்து 11,500 ரூபாய்; 10ம் வகுப்பு கட்டணம், 6,000ல் இருந்து, 11,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை பேச்சு நடத்தினர்.அவை தோல்வியில் முடிந்ததால், நேற்று முன்தினம் காலை, பள்ளியை முற்றுகையிட்டனர். ஈச்சங்காடில் இருந்து மேடவாக்கம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் மேடவாக்கம் - பரங்கிமலை சாலையில், 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமரசப்படுத்தினர். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் அதிகாரிகள், இப்பள்ளியில் நேற்று விசாரணை நடத்தினர்.அப்போது, கல்வியாண்டுக்கு இடையில் கட்டணத்தை உயர்த்த, தனியார் பள்ளிக்கு தடை விதித்ததாக கூறப்படுகிறது.