உள்ளூர் செய்திகள்

புத்தகங்கள் படிக்க ஆர்வம் காட்டும் சிறை கைதிகள்

திண்டுக்கல்: சிறையில் உள்ள கைதிகள் அங்குள்ள நுாலகத்தில் தினமும் புத்தகங்கள் படிக்க ஆர்வம் காட்டுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலக ரோட்டில் மாவட்ட கிளை சிறை உள்ளது. இங்கு 200க்கு மேலான கைதிகள் உள்ளனர். கைதிகளின் நலனுக்காகவும்,அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் சிறையில் நுாலகம் உள்ளது. இங்கு தன்னார்வலர்கள்,அரசு அலுவலர்கள்,புத்தக ஆர்வலர்கள்,விருப்பபடுவோர் அவர்களாகவே முன்வந்து புத்தக தானம் செய்வார்கள். அந்த வகையில் சிறை நுாலகத்தில் 3000 புத்தகங்கள் உள்ளன.இவற்றை இங்கிருக்கும் கைதிகள் தினமும் காலை 10:00 மணிமுதல் மதியம் 12:00 மணி வரை 2 மணி நேரம் படிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆரம்ப காலக்கட்டத்தில் இதற்கு கைதிகளின் மத்தியில் குறைந்த வரவேற்பு இருந்தது.தற்போது புத்தகம் வாசிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து தினமும் 50க்கு மேலான கைதிகள் புத்தக வாசிப்பில் ஈடுபடுகின்றனர்.அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை சிறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொள்கின்றனர். அதுமட்டுமில்லாமல் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுத படிக்க தெரியாத கைதிகளுக்கு கற்றுகொடுக்கும் பணியிலும் சிறை அலுவலர்கள் தினமும் 2 மணி நேரம் ஈடுபடுகின்றனர்.திண்டுக்கல் சிறை அதிகாரிகள் கூறியதாவது: சிறைக்கு வருவோர் ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறுகளை செய்து விட்டு வருகின்றனர்.அவர்கள் தீயப்பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்பதற்காக சிறைகளில் தற்போது கைதிகளின் நன்னடத்தையை அதிகரிக்க பொழுதுபோக்குக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதுபோன்றது தான் நுாலகம், புத்தகம் ஒரு மனிதனை உயரத்திற்கு அழைத்து செல்லும் என்பதை பலரும் நிரூபித்துள்ளனர். தற்போது திண்டுக்கல் சிறையிலும் ஏராளமான கைதிகள் புத்தக வாசிப்பில் ஈடுபடுகின்றனர். அதிகாரிகள் சார்பில் அவர்களுக்கு உதவியும் செய்யப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்