மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வித்திட்டம் துவக்கம்
கோவை: கோவை மாநகராட்சி பள்ளியில் படிக்கும், 5,000 மாணவ - மாணவியருக்கு டிஜிட்டல் கல்வியறிவு அளிக்கும் பயிற்சி திட்டம் நேற்று துவக்கப்பட்டது.கோவை மாநகராட்சி சார்பில், 148 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. 33 ஆயிரத்து, 315 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கல்வித்தரத்தை மேம்படுத்த, மாநகராட்சி கல்விக்குழுவினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுத்தேர்வு எழுதுவோருக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. அவர்களுக்கு மாநகராட்சி செலவில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்க, ஆர்வமுள்ளோருக்கு இசைப்பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிக்கப்படுகிறது.அடுத்த முயற்சியாக மாநகராட்சி நிர்வாகம், ஹோப் பவுண்டேஷன் மற்றும் டெல் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து, மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு சிறப்பு பயிற்சி திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சி, சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி துவக்கி வைத்தார்.முதல் கட்டமாக, கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் உள்ள, 21 பள்ளிகளில், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும்; 5,000 மாணவர்கள் பயன்பெறுவர். மேலும், டிரோன், டெலஸ்கோப், ரோபோ உருவாக்கும் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில், மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா, ஹோப் பவுண்டேஷன் தலைமை இயக்க அதிகாரி சந்திரசேகரன், கவுன்சிலர் வித்யா, மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், திட்ட மேலாளர் அலெக்சாண்டர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.