பள்ளி விடுமுறை முடிவதற்குள் சீருடைகள் வழங்க கோரிக்கை
உடுமலை: அரசு பள்ளிகளில் மீதமுள்ள சீருடைகளை விரைவில் வழங்குவதற்கு மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, அரசின் சார்பில் நலத்திட்ட உதவியாக கல்வியாண்டு தோறும் சீருடைகள் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு கல்வியாண்டிலும் முதல் பருவத்துக்கு ஒன்று, அடுத்தடுத்து மூன்று செட்கள் என பிரித்து மொத்தமாக நான்கு செட்கள் வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில் முதல் பருவத்துக்கான சீருடை மிகவும் தாமதமாகவே வழங்கப்பட்டது. இதனால், கல்வியாண்டு துவங்கிய சில நாட்கள் மாணவர்கள் இன்னலுக்கு உள்ளாகினர். பஸ்சில் வண்ண உடையில் பயணம் செய்ய முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர்.தற்போது, அரையாண்டு முடிந்த நிலையிலும் மீதமுள்ள சீருடைகள் வழங்கப்படவில்லை. மாணவர்களில் ஒரு சிலர் மட்டுமே கூடுதல் செட் சீருடைகள் வைத்துள்ளனர். ஆனால் ஒரே செட் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தற்போது அந்த சீருடையும் கிழிந்தும், மிகவும் பழையதாகியும் விட்டதால், மாணவர்கள் அவற்றை அணிந்துவருவதற்கு தயங்குகின்றனர்.பள்ளியில் வழங்கும் சீருடையை மட்டுமே நம்பி இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அவ்வாறு உள்ள மாணவர்களுக்கு சீருடை மாற்றி அணிந்து வருவதற்கு இல்லாதது பெற்றோரையும் வேதனைபட செய்கிறது.அரையாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்பும்போது சீருடை கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.