இரு மாணவர்கள் மட்டுமே படிக்கும் அரசு துவக்கப்பள்ளி
திருவாடானை: திருவாடானை அருகே காட்டியனேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் இரு மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகிறார். இம்மாணவர்களுக்கு காலை உணவு பிள்ளையாரேந்தல், மதிய உணவு குஞ்சங்குளம் பள்ளிகளில் இருந்து கொண்டு வந்து கொடுக்கப்படுகிறது.இங்குள்ள சமையல் கூடம் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.சில மாதங்களுக்கு முன் கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றினர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பள்ளி மூடப்பட்டது. அங்கு படித்த மாணவர் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பள்ளியையும் அதிகாரிகள் மூடாமல், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.