தொடர் போராட்டம் நடத்த தேசிய ஆசிரியர் சங்கம் முடிவு
திருப்பூர்: தேசிய ஆசிரியர் சங்க மாநில உயர்மட்டகுழு கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது. மாநில தலைவர் திரிலோக சந்திரன் தலைமை வகித்தார். மாநிலப் பொது செயலாளர் கந்தசாமி, பொருளாளர் திருஞானகுகன் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்றோர் பிரிவின் மாநில துணை தலைவர் பழனிசாமி வரவேற்றார்.தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க., அறிவித்த ஆசிரியர்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை உடனடியாக மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். வரும், 24ம் தேதி பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்க வேண்டும். இல்லாவிடில், அரசுக்கு எதிராக போட்டா-ஜியோ (FOTA-GEO) சார்பில் அரசுக்கு எதிராக, மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் நடத்தப்படும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் அலுவலர்கள், மதிப்பூதியம் பெற்றுவரும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள், ஊர்ப்புற நுாலகம்களையும், தொகுப்பூதிய, மதிப்பூதிய அலுவலர்கள் அனைவரையும் நிரந்தர அரசுப் பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியமும், பணிப்பாதுகாப்பும், சட்டப்பூர்வ ஓய்வூதிய பலன்களையும் வழங்க வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் தண்ட பாணி நன்றி கூறினார்.