உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு முறைகேடுகளை தவிர்க்க மையங்களில் கூடுதல் பாதுகாப்பு

புதுடில்லி: இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வரும் 4ம் தேதி நடக்கவுள்ள நிலையில், முறைகேடுகளை தவிர்க்க, தேர்வு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை மேற்கொண்டுள்ளது.நாடு முழுதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் பொதுத் தேர்வு அவசியம். இந்த தேர்வை மத்திய அரசின் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.அதன்படி, 2025-26ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடு முழுதும் 550 நகரங்களில், 5,000க்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தேர்வு நடக்கவுள்ளது.ஆலோசனைகடந்தாண்டு நடந்த இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததை அடுத்து, அதை ரத்து செய்ய வலியுறுத்தி, மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம், வினாத்தாள் மாற்றி வழங்கியதால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மறுதேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.இந்த விவகாரம் பெரும் பூதாகரமானதை அடுத்து, இந்தாண்டுக்கான தேர்வை முறையாக நடத்த வேண்டும் என, பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்தாண்டு நீட் தேர்வை நேர்மையாகவும், சீராகவும் நடத்த என்.டி.ஏ., சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு தரப்பினரிடம் பெற்ற ஆலோசனையை அறிக்கையாக வழங்கியுள்ளது.இந்த சூழலில், இந்தாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து என்.டி.ஏ., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:மருத்துவ இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வை சீராகவும், நியாயமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதை உறுதிசெய்ய அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள் ஆகியோருடன் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.ஒருங்கிணைப்பு குழுநீட் தேர்வுக்கான வினாத்தாள் உள்ளிட்ட பொருட்கள் பத்திரமாக, பாதுகாப்பாக எடுத்துச்செல்ல மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழுக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.நீட் தேர்வு மையங்களில், என்.டி.ஏ.,வால் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் சேர்ந்து, உள்ளூர் போலீசாரும் பல அடுக்கு சோதனைகள் நடத்துவர். வினாத்தாள்கள், ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் உள்ளிட்டவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோசடி மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்க, மையங்களை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள் அவ்வப்போது ஆய்வு செய்து சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான தேர்வை நியாயமான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்