பள்ளிகளில் தரைதளத்தை மேம்படுத்த பெற்றோர் அரசுக்கு வலியுறுத்தல்
உடுமலை: புதிய கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்குகிறது. அரசுப்பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தற்போது பணிகளும் நடக்கிறது.ஆனால் சில பள்ளிகளில், வளாகம் முழுவதும் பள்ளமாகவும், மண் மேடாகவும் இருப்பதால் மழைநீர் தேங்குகிறது. தற்போது மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளிகளில் மழைநீர் குளமாக தேங்கியுள்ளது.பராமரிப்பு பணிகளின் போது, பள்ளி நிர்வாகத்தினர் மழைநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கின்றனர். மீண்டும் அப்பகுதியில் மண் கொண்டு நிரப்பி மேடாக மாற்றுகின்றனர். ஆனால் இந்த தற்காலிக நடவடிக்கையால், முழுமையான பயன்பெற முடிவதில்லை.இதனால் மண் குவியல்களிலும் மழைநீர் தேங்கி, மாணவர்கள் பள்ளி நுழைவாயிலிலிருந்து வகுப்பறை செல்வதற்கும் சிரமப்படும் அளவுக்கு, பள்ளி வளாகம் மாறுகிறது. பெரும்பான்மையான பள்ளிகளில், இதனால் குழந்தைகள் கழிப்பறை செல்வதற்கும் முடியாமல் அவதிப்படுகின்றனர்.பள்ளிகளில் மழைநீர் தேங்காமல், தரைதளத்தை நிரந்தரமாக மேம்படுத்துவதற்கு, பள்ளி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.