உள்ளூர் செய்திகள்

காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் ‍கோரிக்கை

தர்மபுரி: இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு ‍கோரிக்கை விடுத்து உள்ளனர்.நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், தர்மபுரி கலெக்டர் சதீஷிடம் அளித்த மனு:கடந்த 2024 ஜூலை 21ல் நடந்த இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வை தமிழகம் முழுதும், 25,606 தேர்வர்கள் எழுதினோம். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, 2,768 காலிப்பணியிடங்கள் என்பது, 12 ஆண்டுகளாக பணி வாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.கடந்த 2013 முதல், தற்போது வரை ஒரு காலி பணியிடத்தையும் நிரப்பாமல், 2013, 2017, 2019, 2022 வரை, தகுதி தேர்வை மட்டும் தேர்வு வாரியம் நான்கு முறை நடத்தியுள்ளது.அதில், 2024ல் நடந்த நியமன தேர்வை நம்பி காத்திருந்தோம். தற்போது, 40 - 50 வயதை கடந்துள்ள எங்களுக்கு, 2,768 காலிப்பணியிடங்கள் என்பது மிகவும் குறைவானது. சட்டசபையில், 110 விதியின் கீழ் 2024ம் ஆண்டு அறிவித்த, 19,260 காலிப்பணியிடங்களை டி.ஆர்.பி., தேர்வாணையம் வாயிலாக நியமிக்க வேண்டும்.நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 23,500 பேர் இருக்கும் நிலையில், தகுதி இல்லாதவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியவும் தயாராக உள்ளோம்.இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்