உள்ளூர் செய்திகள்

இளம் தலைமுறையினருக்கு ஆர்வம்; சுபான்ஷூ சுக்லா தந்த ஊக்குவிப்பு

திருப்பூர்: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ஆக்சியம் - 4 திட்டத்தின் கீழ் டிராகன் விண்கலத்தில் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்கள் 28 மணி நேரம் பயணித்து சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். அங்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) ஏழு அறிவியல் சோதனைகளுடன், 60 பரிசோதனைகளை மேற்கொண்டு, 2 வாரம் கழித்து, இக்குழுவினர் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புவர் என, நாசா அறிவித்துள்ளது.ராகேஷ் சர்மாவுக்கு பின், 41 ஆண்டுகளுக்கு பின், இந்தியர் ஒருவர் விண்வெளியில் பறந்துள்ளது பெருமைக்குரிய விஷயம். இதை நம் நாட்டு அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கொண்டாடுகின்றனர். இது மாணவ, மாணவியர் மற்றும் இளம் தலைமுறையினரிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது.விஞ்ஞானியாகும் வாய்ப்புஇந்தியா சார்பில் கடந்த, 1984ல், ராகேஷ் ஷர்மா விண்வெளி பயணம் மேற்கொண்டார். 41 ஆண்டு இடைவெளிக்கு பின், சுபான்ஷு சுக்லா பயணித்துள்ளார். இந்தியா சார்பில் விண்வெளியில் பறந்த இரண்டாவது இந்தியர்; விண்வெளி மையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட நேர்த்தியான பயிற்சி, அவரது உழைப்பே இதற்கு காரணம். விண்வெளி அறிவியலில், இது, இந்தியாவின் மிகப்பெரிய சாதனை; போற்றுதலுக்குரிய விஷயம். மனிதனை விண்வெளி மையத்துக்கு அனுப்புவதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் மத்தியில், டாக்டர், இன்ஜினியர் என குறிப்பிட்ட படிப்புகளை மட்டுமே பெற்றோர் திணிக்கின்றனர். இதை தவிர்த்து, இஸ்ரோ, மும்பையில் உள்ள டாடா ஆய்வு மையம் உள்ளிட்டவற்றில் வழங்கப்படும் விண்வெளி ஆராய்ச்சி படிப்பு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். 12ம் வகுப்பு முடித்தவுடன், இஸ்ரோ சார்பில் நடத்தப்படும் தேர்வெழுதி, அதில் வெற்றி பெறுவதன் மூலம், விஞ்ஞானியாகும் வாய்ப்பு பெற முடியும் என அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினரும், வானியலாளருமான பேராசிரியர் மோகனா கூறினார்.சாதிக்க துாண்டும்புத்தர், ஆரியபட்டர் காலத்தில் இருந்தே மருத்துவம், விவசாயம், அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா வளர்ந்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தடுத்த மைல் கல்லை நம் நாடு எட்டி வருகிறது; அதற்கு உதாரணம் தான், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவின் விண்வெளி பயணம். இதுபோன்ற சாதனைகள், மாணவ, மாணவியர் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கும்; நாமும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தும். அறிவியல் மட்டுமின்றி, கலைப்பிரிவு படிக்கும் மாணவர்களும் விண்வெளி அறிவியலை அறிந்துகொள்ள, பொது அறிவியல் என்ற பாடம் இணைக்கப்பட்டுள்ளது என எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி வரலாற்றுத்துறை தலைவர் ராமலிங்கம் கூறினார்.மாணவர்கள் ஊக்குவிப்புஅறிவியல் இயக்கத்தின் பொதுவான நோக்கமே, எளிமையான முறையில் மாணவர்கள் மத்தியில் அறிவியலை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதுதான். இந்திய வீரர்களின் விண்வெளி பயணம், பயணம் மேற்கொண்ட சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட வீரர்கள் குறித்து காட்சிப்படங்கள் உருவாக்கி, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்; அதுதொடர்பாக மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடலும் நடத்துகிறோம். திருப்பூரில் உள்ள அறிவியல் வள மையத்தில், மாதம் ஒரு முறை மாணவ, மாணவியரின் அறிவியல் படைப்புகளை மதிப்பீடு செய்து, அவர்களை ஊக்குவித்து வருகிறோம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் கவுரிசங்கர் கூறினார்.வளரும் தன்னம்பிக்கைமாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதுதான், பள்ளிக்கல்வியின் மையக்கருத்தாக உள்ளது. நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளி பயணம் மேற்கொண்ட சுபான்ஷூ சுக்லா போன்ற வீரர்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பித்து வருகிறோம். அவர்களும் உங்களை போன்று சாதாரண மாணவர்களாக இருந்து, விண்வெளி வீரர்களாக உயர்ந்தவர்கள் தான் எனக்கூறி மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறோம். குறிப்பாக, விண்வெளி ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் மற்றும் சாதனையாளர்களாக வலம் வரும் பலர், அரசுப்பள்ளிகளில் பயின்றவர்கள் தான் என்பதையும் மாணவர் மத்தியில் கூறி வருகிறோம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஆசிரியை சுசீலா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்