உள்ளூர் செய்திகள்

கல்லுாரி, பல்கலை வளாகங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்

பெங்களூரு: பள்ளி, கல்லுாரிகளின் வளாகத்தில் ராகிங், போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றங்களை கட்டுப்படுத்த, கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பட்டப்படிப்பு கல்லுாரிகள், பல்கலைக் கழகங்களில் மாணவ -- மாணவியரை ராகிங் செய்வது, போதைப் பொருள் விற்பது, பயன்படுத்துவது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுத்தும் பயனில்லை.மாணவியருக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே அனைத்து கல்லுாரிகள், பல்கலைக் கழகங்களின் வளாகங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சில கல்லுாரிகளில் உட்புறங்களில் கேமராக்கள் உள்ளன. வளாகங்களில் பொருத்தவில்லை. இனி இங்கும் கேமராக்கள் அவசியம் என, உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக, உயர் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:பட்டப்படிப்பு கல்லுாரிகள், பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும். உயர் கல்வித்துறை எல்லைக்கு உட்பட்ட, அனைத்து கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.ராகிங், போதைப் பொருள் விற்பனை, பயன்படுத்துவது, மாணவியருக்கு பாலியல் தொல்லை தருவது, கிண்டல் செய்வது போன்ற குற்றங்களை கட்டுப்படுத்த, கண்காணிப்பு கேமரா அவசியம்.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும், பெறாத தனியார் கல்லுாரிகள், பல்கலைக் கழகங்களில் ஜூலை 21க்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். பொருத்தியது குறித்து, கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பட்டப்படிப்பு கல்லுாரிகள் மட்டுமின்றி, அனைத்து பி.யு.சி., கல்லுாரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்