துணைவேந்தர் நியமன குழுவில் முதல்வரை நீக்க கவர்னர் வழக்கு
கேரளா: கேரளாவில், பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில், கேரள முதல்வரின் தலையீடு இருப்பதால் அவரை அக்குழுவில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில பல்கலைகளின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் கடந்த 18ல் உத்தரவு பிறப்பித்தது.அதில், 'துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான குழுவில் கேரள அரசு மற்றும் பல்கலை வேந்தர் பரிந்துரைக்கும் நபர்கள் இடம் பெறலாம்' என, தெரிவித்து இருந்தது.இந்நிலையில் கேரள கவர்னர் ராஜேந்தர் அர்லேகர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனு:கேரளா டிஜிட்டல் பல்கலை மற்றும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் கேரள முதல்வர் தலையிடுகிறார்.அவ்வாறு தலையிடுவது பல்கலைக்கழக மானிய குழுவின் நெறிமுறைகளின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிரான வழக்கை அவரே விசாரித்து தீர்ப்பு வழங்குவது போல, பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் கேரள முதல்வரின் தலையீடு உள்ளது.துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கடந்த 18ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அமைச்சரவையின் அறிவுரைகளின் படி கவர்னர் செயல்பட வேண்டியதில்லை. எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.