செமிகண்டக்டர் புதுமைக்கு சென்னை ஐஐடி-அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஒத்துழைப்பு
சென்னை: சென்னை ஐஐடி, அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அப்ளைடு மெட்டீரியல்ஸ் இந்தியா தனியார் நிறுவனத்துடன் அதிநவீன செமிகண்டக்டர் ஆராய்ச்சி மற்றும் தொழிலாளர் மேம்பாடு ஆகியவற்றில் உத்திசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளது.இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, செமிகண்டக்டர் உற்பத்தி உபகரணங்கள் செயல்முறைகளை மாதிரியாக்கி மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட அதிநவீன டிஜிட்டல் இரட்டை தீர்வான அப்ளைடு மெட்டீரியல்சின் அப்ளைடுட்வின் தளத்தின் அடிப்படை மென்பொருள் கட்டமைப்பை சென்னை ஐஐடி பயன்படுத்துகிறது.இப்பயன்பாட்டைத் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் நேற்று சென்னை ஐஐடி நடத்திய செய்முறை பயிற்சிப் பயிலரங்கில், 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இந்தப் பயிற்சிப் பயிலரங்கில் உரையாற்றிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “அப்ளைடு மெட்டீரியல்சின் அப்ளைடுட்வின் கட்டமைப்பின் அடிப்படை மென்பொருளைப் பயன்படுத்துவதால், கருத்து உருவாக்கம், முன்மாதிரி, சோதனை மற்றும் செயல்முறை ஆய்வு ஆகியவற்றை மெய்நிகர் முறையில் விரைவுபடுத்த தங்களது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டும்”, என்று கூறினார். மேலும் இதனால் ஆராய்ச்சி - மேம்பாட்டிற்கான செலவும் நேரமும் கணிசமாகக் குறையும் என்றும் அவர் தெரிவித்தார். தொழிலாளர்களைத் தயார்படுத்துவதில் இம்முயற்சி மாற்றத்தக்க நடவடிக்கையாக இருப்பதுடன் நாட்டின் செமிகண்டக்டர் இலக்குடன் வலுவாக ஒத்து போகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.