உள்ளூர் செய்திகள்

தேர்தலுக்கு முன் தேர்வு நடத்த ஆயத்தம்: கல்வித்துறையினர் தகவல்

பொள்ளாச்சி: வரும், 2026ல், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை விரைந்து முடிக்க திட்டமிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், வரும், 2026ல், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. இப்பணியில், பெரும்பாலும் ஆசிரியர்களே ஈடுபடுவர். அவ்வகையில், பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத்தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கேற்ப, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, நகராட்சி, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் தொடர்பான விபரங்களை, பள்ளிக் கல்வித்துறை கோரியுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வரும், 2026 மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும். அதற்கு முன்னதாக தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி தேர்வு மற்றும் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவர்.அதிலும், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், ஏப்., மாதங்களில் நடத்தப்படலாம். அதற்கு முன்னதாகவே, பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு நடத்தி முடிக்கப்படும்.தற்போது, பொதுத்தேர்வு மையங்களில் பணி ஒதுக்கீடு செய்வதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளன. அதன்படி, பள்ளிகள் தோறும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் விபரம், இ.பி.எஸ்., படிவத்தில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்