உள்ளூர் செய்திகள்

உலகின் கலங்கரை விளக்கமாக திகழும் இந்தியா: பிரதமர் பெருமிதம்

மும்பை: “உலகளாவிய பதற்றங்கள், வர்த்தக இடையூறுகள் மற்றும் மாறிவரும் வினியோக தொடர்களுக்கு நடுவே, இந்தியா ஒரு நிலையான கலங்கரை விளக்கமாக விளங்குகிறது,” என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவின் மும்பையில், இந்திய கடல்சார் வார விழா நடந்து வருகிறது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமித் ஷா கடந்த, 27ம் தேதி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:துடிப்பான ஜனநாயகம் மற்றும் நம்பகத்தன்மை நம் நாட்டை உலகளவில் சிறப்புறச் செய்கின்றன. உலகளாவிய கடல் பகுதி கொந்தளிப்பாக இருக்கும் போது, உலக நாடுகள் ஒரு நிலையான கலங்கரை விளக்கத்தை தேடுகின்றன. அத்தகைய கலங்கரை விளக்கமாக, முழு பலத்துடன் செயல்படும் திறன் உடைய நாடாக இந்தியா விளங்குகிறது.உலகளாவிய பதற்றங்கள், வர்த்தக இடையூறுகள் மற்றும் மாறிவரும் வினியோக தொடர்க ளுக்கு இடையே, சுயாட்சி, அமைதி மற்றும் அனைவருக்குமான வளர்ச்சியின் சின்னமாக நம் நாடு விளங்குகிறது.நம் நாட்டின் துறைமுகங்கள், உலகில் உள்ள வளரும் நாடுகளில் மிகவும் திறமையானதாக கருதப்படுகின்றன. பல விஷயங்களில், வளர்ந்த நாடுகளைவிட இந்திய துறைமுகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.நம் நாட்டின் கடல்சார் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது. நுாற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்த காலனித்துவ கப்பல் சட்டங்களை, 21ம் நுாற்றாண்டுக்கு ஏற்ற நவீன மற்றும் எதிர்கால சட்டங்களால் மாற்றியமைத்துள்ளோம்.இந்த புதிய சட்டங்கள் கடல்சார் வாரியங்களின் பங்கை வலுப்படுத்துகின்றன. துறைமுக நிர்வாகத்தில், 'டிஜிட்டல்' தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கின்றன.கடல்சார் இந்தியாவின் தொலைநோக்கு பார்வையின் கீழ், 150க்கும் மேற்பட்ட முயற்சிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதன் விளைவாக, கடல்சார் துறை முழுதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.நம் நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களின் திறன் இரட்டிப்பாகியுள்ளது. கப்பல் சுற்றுலா கணிசமான வேகத்தை அடைந்துள்ளது. உள்நாட்டு நீர்வழிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளன.சரக்கு இயக்கம், 700 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. கப்பல் போக்குவரத்துக்கான செயல்பாட்டு நீர்வழிகளின் எண்ணிக்கை மூன்றில் இருந்து, 32 ஆக உயர்ந்து உள்ளது. நம் துறைமுகங்களின் நிகர ஆண்டு உபரி, கடந்த, 10 ஆண்டுகளில் ஒன்பது மடங்கு அதிகரித்துஉள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்